தன் கனவில் கண்டதைக் கூறுதல் காண்க. ''வன் துணைக் கோள் அரி இரண்டு'' (5118). இப்பாடலில் 'சிங்க ஏறு இரண்டொடு' என்ற தொடரில் வரும் 'இரண்டு' என்னும் எண்ணினை ''மீளிமா'' என்பதனோடும், 'வேக நாகம்' என்பதனோடும் தனித்தனியே கூட்டி மீளிமா இரண்டு, வேக நாகம் இரண்டு எனவும் பொருள் கொள்வர், ''மீளிமா இரண்டு'' என்றது நளன், நீலன் என்ற இருவரையும், 'வேக நாகம்' என்றது அனுமன், தாரன் என்ற இருவரையும் குறிக்கும் என்றும் விளக்கம் கூறுவர். 'தமாலம்' என்பதற்கு 'மூலம் ஆர்' என்பதை அடை மொழியாக்கி 'வேரூன்றிய பச்சிலை மரங்கள்' என்றும் பொருள் கொள்வர். ஏலம் - ஏலக்காய்ச் செடி; இதனைச் 'சடாமஞ்சில்' என்னும் ஒருவகை மரம் எனக் கொள்வாரும் உளர். 'துவன்று நிறைவாகும்' (உரியியல் - 34) என்பது தொல்காப்பியம். 1 3936. | உழை உலாம் நெடுங் கண் மாதர் ஊசல்; ஊசல் அல்லவேல், தழை உலாவு சந்து அலர்ந்த சாரல்; சாரல் அல்லவேல், மழை உலாவு முன்றில்; அல்ல, மன்றல் நாறு சண்பகக் குழை உலாவு சோலை; சோலை அல்ல, பொன் செய் குன்றமே. |
உழை உலாம் நெடுங்கண் -(அந்த வழி எங்கும்) மான் போலும் பார்வையினை உடைய;மாதர் ஊசல் -மகளிர் ஆடும் ஊஞ்சல்களும்; ஊசல் அல்லவேல் -ஊஞ்சல்கள் இல்லாத இடங்களில்;தழை உலாவு - தழைகள் காற்றில் அசைந்தாடும்;சந்து அலர்ந்த சாரல் -சந்தன மரங்கள் மலர்ந்து விளங்கும் மலைச்சாரல்களும்;சாரல் அல்லவேல் -மலைச் சாரல்கள் இல்லையெனின்;மழை உலாவு முன்றில் -மேகங்கள் தவழ்கின்ற மலைகளின் முற்பகுதிகளும்;அல்ல - அவையல்லாத இடங்களில்;மன்றல் நாறு -மணம் கமழ்கின்ற;குழை உலாவும் சண் பகச் சோலை -தளிர்கள் அசையும் சண்பகச் சோலைகளும்;சோலை அல்ல -சோலைகள் இல்லாத இடங்களில்;பொன் செய் குன்றமே -பொன் போன்ற அழகிய குன்றுகளுமே(மிகுந்து காணப்பெற்றன). இராமலக்குவர் சென்ற நீண்ட வழியெங்கும் ஊஞ்சல்களும், சந்தன மலைச் சாரல்களும், மேகங்கள் தவழ்கின்ற மலை முற்றங்களும், சண்பகச் சோலைகளும், அழகிய குன்றுகளும் இருந்தன என அந்நாட்டின் வளம் உணர்த்தியவாறு. ஊசல், ஊசல் அல்ல சாரல், சாரல் அல்ல முன்றில், அவையல்ல சோலை, சோலை அல்ல குன்றம் எனத் தொடர்புபடுத்திக் கூறியதால் மாலை அணியின் பாற்படும். 'உலாம்' - உலாவும் என்பதின் விகாரம். முன்றில் - இலக்கணப் போலி; பொன் செய் - செய் உவம உருபு; (பொன் போல). பொன் செய் குன்றம் - பொன்னை விளைவிக்கும் மலை, எனவும் பொன்னால் இயற்றப்பட்ட செய் குன்று எனவும் பொருள் கொள்வாரும்உளர். 2 |