தன்மையேனும் -அங்ஙனம் பாதுகாத்தலே அரச இயல்பாயினும்;தீயன வந்த போது -(எவராலேனும்) தீமை பயக்கும் செயல்கள் நேருமாயின்; தீமையோரை அவ்வாறு -தீங்கு செய்தவர்களை;அற வரம்பு இகவா எண்ணம் -தருமத்தின் எல்லையைக் கடவாதபடி;சுடுதி -(காய்ந்து) தண்டிப்பாயாக. குடிமக்களிடத்து அன்பு காட்டி ஒழுகுதலும், அவ்வாறு நடக்கையில் எவரேனும் தவறு செய்தால் குற்றத்திற்கேற்ற படி தண்டித்தலும் அரசர்க்கு ஏற்ற முறையாகும் என்பது கருத்தாம். 'குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல், வடுவன்று வேந்தன் தொழில்', 'கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்', 'தக்காங்கு நாடித் தலைச் செல்லா வண்ணத்தால், ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து'; 'கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்' (குறள் 549, 550, 561, 567) என்னும் கருத்துக்கள் இங்குக் காணத்தக்கன. நாயகன் அல்லன் என்ற உண்மையை மறைத்துத் தாய் என மற்றொரு தன்மையை ஏற்றிக் கூறியதால் இப்பாடல் ஒழிப்பணியின்பாற்படும். மன்னனையும் கடவுளையும் தாயெனக் கூறுதல் மரபாகும். 'தாயொக்கும் அன்பில்' (171) 'தாயென உயிர்க்கு நல்கி' (4061); 'அம்மையே அப்பா' (திருவாச. பிடித்த 3) என்பன காண்க. 14 4129. | 'இறத்தலும் பிறத்தல்தானும் என்பன இரண்டும், யாண்டும், திறத்துளி நோக்கின், செய்த வினை தரத் தெரிந்த அன்றே? புறத்து இனி உரைப்பது என்னே? பூவின்மேல் புனிதற்கேனும், அறத்தினது இறுதி, வாழ்நாட்கு இறுதி; அஃது உறுதி, அன்ப! |
அன்ப!- அன்பனே!திறத்துளி நோக்கின் -செம்மைமான வழியால் பார்க்கு மிடத்து;இறத்தலும் பிறத்தல் தானும் -சாதலும் பிறத்தலும்;என்பன இரண்டும்-என்று சொல்லப்படுவனவாகிய இரண்டு தன்மைகளும்;யாண்டும்- எப்பொழுதும்;செய்த வினை தர -(அவ்வவ் உயிர்கள்) செய்த வினைகள் தருதலால்;தெரிந்த அன்றே -(விளைவன எனத்) தெரிவதாகும் அல்லவா? பூவின்மேல் புனிதற்கேனும் -(திருமாலின் நாபித்) தாமரை மலர்மேல் தோன்றிய தூய பண்புகளை உடைய நான்முகனுக்கே யானாலும்;அறத்தினது இறுதி -அறநெறியிலிருந்து தவறுதல்;வாழ் நாட்கு இறுதி -ஆயுள் முடிவிற்குக் காரணமாம்;அஃது -அறநெறியிலிருந்து தவறாமை;உறுதி என்ப-ஆயுளுக்கு உறுதியைச் செய்வதாம் என்று கூறுவர்;இனி-இதைவிட; புறத்து உரைப்பது என்னே -வேறு சொல்வதற்கு என்ன இருக்கிறது? திறத்து உளி - உளி என்பது மூன்றாம் வேற்றுமைப் பொருள் படுவதோர் இடைச் சொல். அறத்திற்கு மாறாக எவர் நடப்பினும் அதன் பயனை அனுபவிப்பர் |