பக்கம் எண் :

60சுந்தர காண்டம்

4817.

துண்டப் பிறைத்துணை எனச்சுடர் எயிற்றாள்
கண்டத்திடைக்கறை யுடைக்கடவுள் கைம்மா
முண்டத்து உரித்தஉரியால் முளரிவந்தான்
அண்டத்தினுக்குஉறை அமைத்தனைய வாயாள்.

     பிறைத் துண்டத்துணை என - பிறைத் துண்டத்தின்இரட்டை
என்றுசொல்லும்படி; சுடர் எயிற்றாள் - விளங்குகின்ற கோரைப் பற்களை
உடையவள்; கண்டத் திடைக் கறையுடைக் கடவுள் - கழுத்தி்ன்கண்
விடத்தால் உண்டாகிய நீலநிறம் பொருந்திய சிவபிரான்; கைம்மா -
யானையினது; முண்டத்து உரித்த உரியால் - உடம்பிலிருந்து உரித்த
தோலாலே; முளரி வந்தான் அண்டத்தினுக்கு -
பிரமதேவனால் ஆகிய
அண்டத்துக்கு; உறை அமைத்து அனைய - உறை தைத்துப் போட்டால்
எவ்வளவு பெரிதாக இருக்குமோ அத்தகைய; வாயாள் - வாயினை
உடையவள்.

     தலையற்ற உடலைமுண்டம் என்றும், உடலற்ற தலையைக் குண்டம்
என்றும் கூறும் வழக்குண்டு. முனிவர்கள் ஏவிய யானையைச் சிவபிரான்
உரித்துப் போர்த்துக் கொண்ட செய்தி புராணங்களில் காண்க. இது கஜ
சம்ஹாரமூர்த்தம் - கோயில்களில் காணலாம்.                  (77)

4818.

நின்றாள்நிமிர்ந்து அலைநெடுங் கடலின் நீர்தன்
வன்தான் அலம்பமுடிவான் முகடு வௌவ
அன்றுஆய்திறத்தவன், அறத்தை அருளோடும்
தின்றாள்ஒருத்திஇவள் என்பது தெரிந்தான்.

     நிமிர்ந்துஅலைநெடுங் கடலின் நீர் - பெருகி அலையுடன் கூடிய
கடலின் தண்ணீரானது; தன்வன்தாள் - தன்னுடைய வலிமையான பாதத்தை;
அலம்ப - கழுவ; வான் முகடு முடி வௌவ - ஆகாயத்தின் உச்சியை
தலை அளாவ; நின்றாள் - (அனுமனுக்கு எதிரே) நின்றாள்; ஆய்
திறத்தவன்-
ஆராயும் வலிமைபெற்ற அனுமன்; இவள் - இந்த அரக்கி;
அறத்தை -
தருமத்தை; அருளோடும் தின்றாய் ஒருத்தி - கருணையுடன்
சேர்த்துஉண்டாளாகிய ஒருத்தி; என்பது - என்னும் உண்மையை; அன்று
தெரிந்தான்-
அப்போது தெரிந்து கொண்டான்;

     அரக்கியானவள்பேருருக்கொண்டு நின்றாள். அனுமன் இவள்
அறத்தையும் அருளையும் தின்ற ஒருபெண் என்பதை அறிந்தான்.