இந்நிகழ்ச்சியில் வீடணன்மேல் குறைகூற எந்தக் காரணமும் இல்லை. நாகாஸ்திரத்தை இந்திரசித்தன் பயன்படுத்துவான் என்று வீடணன் எதிர்பார்க்கவில்லை. தேவர்களிடம் பெற்ற நாகாஸ்திரம் இலக்குவனை ஒன்றும் செய்யாது என்றும் வீடணன் கருதியிருத்தல் வேண்டும். அதனால்தான் அவன் இராமனை அழைக்கவில்லை. அப்படி இருந்தும், தம்பியை இழந்துவிட்டோம் என்ற துயரத்தில், இராமன் பேசிய பேச்சுக்களாகும் இவை. ஆனால், இவ்வாறு பேசிய இராகவன், கருடன் வந்து, நாகபாசத்தின் பிடியிலிருந்து அனைவரையும் மீட்டவுடன் தான் அவசரப்பட்டு வீடணனைக் குற்றங்கூறியதை நினைத்து வருந்துகிறான் என்று நினைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு நினைக்கத் தக்க காரணம் ஒன்று உண்டு. நிகும்பலை அழித்து, இந்திரசித்தனை வென்று, அந்த வெற்றிப் பெருமிதத்தோடு இந்திரசித்தன் தலையையும் எடுத்துக்கொண்டு இலக்குவன், அனுமன், வீடணன் ஆகிய மூவரும் இராமனைக் காண வருகின்றனர். இலக்குவன் வெற்றியை அறுபட்ட தலையின் மூலம் அறிந்துகொண்ட இராமன் மனநிலையையும் அவன் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமல் இருந்ததையும் கம்பன் படம்பிடித்துக் காட்டுகிறான். |
என்ற பாடல் மூலம் அந்த நால்வரிடையே நடைபெற்ற ஒரு நாடகத்தையே நம் கண்முன் கொண்டுவருகிறான் கம்பன். இந்த மவுனத்திற்குப் பிறகு, உதிரம் படிந்த தம்பியின் தோள்களைத் தழுவிக்கொண்டு, "சீதை என்னிடம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன்" என்று கூறுவதோடு, "தம்பி உடையான் பகை அஞ்சான்" என்ற முதுமொழியை மெய்ப்பித்தாய் என்றுதான் கூறினானே ஒழிய, இலக்குவன் வெற்றியைப் பாராட்டிப் பேசவில்லை. ஆனால், கடும்போர் செய்து வெற்றி பெற்ற இலக்குவனையோ அவனைத் தோளில் சுமந்து ரதம் போல் உதவிய அனுமனையோ |