பக்கம் எண் :

53   யுத்த காண்டம்

படைத்து உலவவிடுகிறான் கம்பன். பண்பின்  வடிவமாக உள்ள
பெரியோர்கள் கூட, சில சமயங்களில் மிகச்  சிறிய  தவறுகளை
இழைத்துவிடுவர். அவர்கள் மனிதர்கள்தான் என்பதற்கு இதுவே
சான்றாகும். சூர்ப்பணகையிடத்து, உரையாடியதும்,   இலக்குவன்
பேச்சைத்தட்டிவிட்டு,     சீதை    விரும்பினாள்  என்ற  ஒரே
காரணத்திற்காக மானைப் பிடிக்கப்போனதும், வாலி யார்? என்று
முழுவதும்    அறியாமல் அவனைக் கொன்றதும், ஒரு பிழையும்
செய்யாத   வீடணனை,   என்னைக் கெடுத்தொழிந்தனை என்று
கூறியதும், குணமென்னும்   குன்றேறிநின்ற  இராகவன்  போன்ற
மனிதர்கள் செய்யும், அல்லது பேசும் மிகச் சிறிய  பிழைகளாகும்.
இதனால்    அவர்கள்    உயர்வும்,     பெருமையும்,  சிறப்பும்
எவ்விதத்திலும் குறைந்துவிடுவ தில்லை. இத்தகைய சிறு குறைகள்
ஒரு பெரியவனின் வாழ்க்கையில்   காணப்படாவிட்டால்,  அவன்
மனிதனாக இருந்தும் மனிதனாகக் கருதப்படாமல், தெய்வமாகவே
கருதப்படுவான். தெய்வமே  ஆனாலும்    மானிட உருத் தாங்கி,
மண்ணிடை வாழவந்தால்  மனிதர்களுக்குரிய   சில இ யல்புகள்
அவர்களிடத்தும்      இருந்தே      தீரும்.     இக்குறைகளே,
இப்பாத்திரங்கள்மாட்டு   நாம்    அன்பு     செய்யவும்,  உறவு
கொண்டாடவும் உதவுகின்றன.
  

'பிரபோத    சந்திரோதயம்'    என்ற   வடமொழி  உருவக
நாடகத்தில்      பேசப்படும்    ஒரு    கருத்து   இங்கே  நாம்
கவனிக்கத்தக்கதாகும்.      நிர்க்குணப்   பிரம்மம்கூடச், சகுணப்
பிரம்மமாக மாறும்பொழுது, அப்பிரம்மம்    உலகிடை மக்களாகத்
தோன்றினால்,    மக்களிடம்   காணப்படும் சிறு குறைகள் அந்தச்
சகுணப் பிரம்மத்திடமும் காணப்படும். இக் கருத்து,  இராமன்பற்றி
நாம் மேலே கூறிய சில கருத்துகளுக்கு அரண் செய்வதாகும்.
 

மாபெரும்      செயலைச்  செய்த    இலக்குவனை இராமன்
பாராட்டாமல் 'வீடணன்   தந்த    வெற்றி ஈது' என்று கூறியதற்கு
இதுவரை கூறப்பெற்ற காரணத்தை அல்லாமல் மற்றொரு காரணமும்
இருக்கலாம் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. கோதாவரி   போன்று
ஆழமும்,   தெளிவும் உள்ள கம்பநாடன் பாடல்களில்  வரும் சில
சொற்களும்    சொற்றொடர்களும்     அவை   அமைந்திருக்கும்
நிலைக்களமும் சிந்திக்கச் சிந்திக்கப்   புதிய  புதிய பொருள்களைத்
தருவனவாக அமைந்துள்ளன.