இராமன் செய்திகளையும் முறையே தெரிவிக்கிறான். பரதன் இராமன் இருக்கும் இடம் நோக்கி அனுமனுடன் கங்கைக் கரை சார்கிறான். |
குகன் பரத்துவாச ஆச்சிரமம் வந்து இராமனைப் பணிந்து அவனோடு சேர்ந்து கொள்கிறான் - அனைவரும் புட்பகத்தில் ஏறி அயோத்தி நகர்ப்புறம் சார்கிறார்கள். இராமனைப் பரதன் காணுகிறான். விமானம் நிலத்தை அடைகிறது. இராமன் வருகை கண்டு தாயார் முதலிய அனைவரும் மகிழ்கின்றனர். வணங்கற்குரியாரை முறைப்படி மற்றவர் வணங்க அனைவரும் விமானத்து ஏறி அயோத்திக்கு வந்து சேர்கிறார்கள் என்பது முதலிய செய்திகள் இப்படலத்துக் கூறப்பட்டுள்ளன. |
இராமன் வீடணனுக்கு ஆறுதல் கூறி இலக்குவனால் முடிசூட்டச் செய்தல் |
9952. | 'வருந்தல், நீதி மனு நெறி யாவையும் |
| பொருந்து கேள்விப் புலமையினோய்!' எனா, |
| அருந் தவப் பயனால் அடைந்தாற்கு அறைந்து, |
| இருந் தவத்து இளையோற்கு இது இயம்பினான்:* |
|
அருந் தவப் பயனால் அடைந்தாற்கு- தான் செய்த அரிய புண்ணியத்தின் பயனால் இராமனை வந்து அடைந்தவனாகிய வீடணனுக்கு இராமன்; நீதி மனு நெறி யாவையும் பொருந்து கேள்விப் புலமையினோய்!- நீதி நெறிகளையும் மனு தரும் முறைகளையும் ஆகிய யாவற்றையும் நன்கு அறிந்து பொருந்திய கேள்வி ஞானத்தோடு கூடிய அறிவாற்றல் பொருந்திய வீடணனே!; வருந்தல் - வருத்தமுறாதே; எனா- என்று; அறைந்து- எடுத்துக் கூறி (அவனை ஆற்றி); இருந்தவத்து இளையோற்கு- பெரிய தவச் செல்வத்தை உடைய இலக்குவனுக்கு; இது- (பின் வருகின்ற) இந்தச் செய்தியை; இயம்பினான்- எடுத்துரைத்தான். |
அறவுணர்வும் தரும சாஸ்திரமும் நிரம்பப் பெற்றவனாதலின் அண்ணன், உறவினர் முதலியோர் இறப்புக்கு வருந்தல் தகுதியன்று என்பதாம். வீடணனது அருந்தவப் பயனை ''நீதியும் தருமம் நின்ற நிலைமையும் புலமைதானும், ஆதி அம் கடவுளாலே அருந்தவம் ஆற்றிப் பெற்றாய்'' என்ற கும்பகருணன் (கம்ப. 7406) கூற்றால் அறிக. |
(1) |
9953. | 'சோதியான் மகன், வாயுவின் தோன்றல், மற்று |
| ஏது இல் வானர வீரரொடு ஏகி, நீ |
| ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை |
| நீதியானை நெடு முடி சூட்டுவாய்.'* |