| விரை செறி அலங்கல் மாலைப் புட்பக விமானம்' |
| என்றுஎன்று, |
| உரைசெய்து, வான் உளோர்கள் ஒண் மலர் தூவி |
| ஆர்த்தார்.* |
|
வான் உளோர்கள் - தேவர்கள்; விரை செறி அலங்கல் மாலைப் புட்பகவிமானம் உரைசெயின் - மணமிக்க மலர் மாலை அணிந்த இந்த புட்பக விமானம் பற்றிச் சொல்லப் புக்கால்; உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா - உலகம் உண்டவனாகிய திருமாலின் அழகு பொருந்திய திருவயிறும் உவமையாகாது; கரைசெயல் அரிய வேதக் குறுமுனி கையும் ஒவ்வா - கரை காண முடியாத வேதங்களை உணர்ந்த அகத்திய முனிவனது (கடலை அடக்கிய) கையும் உவமையாகாது; என்று என்று- என்று கூறி; ஒண் மலர் தூவி ஆர்த்தார் - ஒள்ளிய மலர்களைத் தூவி ஆரவாரம் செய்தனர். |
உலகை அடக்கிய வயிறும், கடலை அடக்கிய கையும் புட்பகத்துக்கு ஒவ்வா என்றதாம். |
(337) |
10289. | அசனியின் குழுவும், ஆழி ஏழும் ஒத்து |
| ஆர்த்ததென்ன, |
| விசையுறு முரசும், வேதத்து ஓதையும், விளி கொள் |
| சங்கும், |
| இசையுறு குரலும், ஏத்தின் அரவமும், எழுந்து |
| பொங்கி, |
| திசை உறச் சென்று, வானோர் அந்தரத்து ஒலியின் |
| தீர்ந்த. |
|
விசையுறு முரசும்- வேகமாக அடிக்கப் பெறும் முரசு ஓசையும்; வேதத்து ஓதையும் - வேத ஓசையும்; விளிகொள் சங்கும்- சங்க நாதமும்; இசை உறுகுரலும் - இராகம் கூடிய வாய்ப் பாட்டொலியும்; ஏத்தின் அரவமும்- தோத்திர முழக்கொலியும்; எழுந்து பொங்கி - மேலே புறப்பட்டுச் சென்று; திசை உறச் சென்று- நாலா பக்கமும் அளாவி; வானோர் அந்தரத்து ஒலியின்- தேவர்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் மேலே செய்யும் ஆரவாரத்தின் கண்; தீர்ந்த- ஒலியடங்கிப் போயின; |
தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தின் மிகுதி உணர்த்தியது. |
(338) |