''நீங்கள் யாவரும் முனைந்து சென்று இராம இலக்குவரைக் கொன்றிடுங்கள். நான் வானர சேனையை அழிக்கிறேன்'' என்று இராவணன் கூறினான். அவன் சொற்படி அரக்கர் தலைவர்கள் தம் படைகளோடு இராம, இலக்குவரை எதிர்த்துப்போர் செய்யப் போயினர். இராவணன் தனது மூலபலச் சேனையையும் அவ் அரக்கர்க்கு முன்னே இராம இலக்குவரை அழித்திட அனுப்பினான். ஆக, மூல பலப்படையும் எஞ்சியிருந்த அரக்கர் படையும் இராம, இலக்குவரை அழித்திடும் கடமை பூண்டன. இராவணன், தேர் ஏறி, வானர சேனையை முற்றும் அழித்திடப் போர்க்கோலம் கொண்டு புறப்பட்டான். போர்க்களமெங்கும் அரக்கர் சேனையே தென்பட்டது கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் முறையிட்டனர். 'இராமபிரான் இப்படைகளை யொழிப்பார்' எனத்தேவர்க்குச் சிவபிரான் தேறுதல் கூறினார். அரக்கர் சேனையைக் கண்ட வானர வீரர்கள் அஞ்சிச் சிதறி ஓடினர். சுக்கிரீவன், அங்கதன், அனுமன் மூவர் மட்டுமே அஞ்சி ஓடாது நின்றனர். அரக்கர் சேனையின் வரலாறும் தன்மையும் கேட்டறிந்த இராமபிரான், அச்சம் தவிர்த்துப் போர்க்களம் மீளுமாறு அழைத்திடச் சொன்னான். அங்கதன் அழைத்தபோது முதலில் வரத் தயங்கிய ஜாம்பவான் உட்பட வானர சேனையினர் யாவரும் பின்னர்ப் போர் புரிதலே தக்கதெனத் துணிந்து மீண்டனர். அவர்களுக்குப் பாதுகாவலாகத் துணை இருக்கும்படி இலக்குவனை இராமன் ஏவினான். சுக்கிரீவன் முதலோர் இலக்குவனுக்குத் துணையாகுமாறு பணிக்கப்பட்டனர். தான் ஒருவனே மூலபலப் படையைத் தனித்து நின்று அழிக்கப்போவதாக இராமபிரான் கூறினன். அநுமன் தான் மட்டிலுமாக உடன்வந்து பெருமானைத் தோள்மீது சுமப்பதாக வேண்டியதையும் மறுத்து, அவனை இலக்குவனுக்குத் துணையாக இருக்குமாறு வற்புறுத்திப் பணித்து, இராமபிரான் மூலபலப் படையைத் தனியொருவனாக எதிர்த்துப் பொருதிடலானான். |