அந்நாட்டகத்தின் பல விடங்களினும் உள்ள நீர் நிலைகளில். தாமரை மலர்கள் மிகுதியாக மலர்ந்து விளங்குகின்றன. அந்நீர் நிலைகளில் உள்ள மீன்கள் தாமரை மலர்களின்மீது துள்ளிக்குதித்து விளையாடல் புரிந்து களிக்கின்றன. வீட்டகத்திலோ அழகிய மாதர்கள் பலர் நிறைந்துள்ளனர். அவர்களுடைய முகங்களோ செந்தாமரை மலரைப்போன்று திகழ்கின்றன. அவர்களுடைய கண்கள் அடிக்கடி மருண்டு பார்க்கும் பான்மையுடையவையாகளாக மிளிர்கின்றன. தாமரை மலரில் மீன்கள் துள்ளிக்குதிக்குந் தோற்றமும், மாதர்முகத்துக் கண்களின் பிறழ்ச்சியும் காண்போர்க்கு ஒரே தன்மையுடையனவாகக் காணப்பெறுகின்றன. இதனால் அந்நாட்டின் நீர்வளமும் மாதர்களின் அழகுவளமும் இனிது புலனாகின்றன. மாதர்களின் முகங்கட்குத் தாமரைமலர் உவமை; அவர்களுடைய கண்களுக்குக் கயல்மீன்கள் உவமை. |