பக்கம் எண் :

பக்கம் : 186
 

ஐந்தாவது
மந்திரசாலைச் சருக்கம்

     [இச்சருக்கத்தின் கண் சுவலன சடியரசன் அமைச்சர்களை மந்திர சாலைக்கு அழைப்பித்தலும், அவர்கள்பால் அமைச்சியலின் நன்மையைச் சிறப்பித்துக் கூறுதலும், சுயம்பிரபைக்கு ஏற்ற கணவனைத் தெரிந்து கூறுமாறு அவர்களைப் கேட்பதும், சுச்சுதன் என்னும் அமைச்சன் அச்சுவகண்டன் என்பவனது சிறப்பை யெடுத்துக் கூறி அவனே தகுந்தவன் என்பதும், அவனை மறுத்துப் பவச்சுதன் என்பவன், கின்னரகீத நாட்டு அரசிளங் குமரனான பவனஞ்சன் முதல் இந்திர சஞ்சயத்து அருஞ்சயன் ஈறாக இளவரசர் பலரையும் கூறி அவர்களுள் ஒருவனைத் தெரிந்துகொள்ளுதல் தகுதியென்பதும், அவனை மறுத்துச் சுதசாகரன் என்பவன் சுரேந்திர காந்தத்து விச்சுவன் என்பான் சிறந்தவன் என்பதும்; இவர்கள் அனைவரையும் விலக்கிச் சுமந்திரி யென்பவன் சுயம்வரமும் கூடாதென மறுத்துச் சதவிந்து என்னும் நிமித்திகனை உசாவுதல் வேண்டுமென்பதும், அதைக் கேட்டு அரசன் சதவிந்து நிமித்திகனிடஞ் செல்வதும், அச்சதவிந்து நிமித்திகன் மாபுராணத்தினைச் சான்று காட்டிச் சுயம்பிரபைக்குத் திவிட்டனே ஏற்ற கணவன் என்றும், அவன் அரிமாவை வாய்கிழிப்பான் என்றும் கூறுதலும், அரசன் திரும்பி வந்து அமைச்சர்களுக்கு உரைத்து, மருசி யென்பவனைப் பயாபதியால் தூது விடுப்பதும் அவன் சுரமை நாட்டுக்கு வருவதும் பிறவுங் கூறப்பெறுகின்றன.]
 

அமைச்சர்கள் அரசனிடத்திற்கு வருதல்
239. செஞ்சினைத் தெரியலா னருளிச் செய்தது
தஞ்செவிக் கிசைத்தலுந் தணப்பில் கேள்வியா
ரஞ்சினர் நடுங்கின ராகி யாயிடை
நஞ்சிவர் வேலினான் பாத நண்ணினார்.
 
     (இ - ள்.) தணப்பில் கேள்வியார் - நீங்காத கல்வியறிவை யுடையவர்களாகிய அமைச்சர்கள்; செஞ்சினைத் தெரியலான் அருளிச் செய்தது - அழகிய கிளைகளில் தோன்றிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த சுவலனசடியரசனுடைய செய்தியானது; தம் செவிக்கு இசைத்தலும் - தங்களுடைய காதுகளிலே கேட்ட அளவில், அஞ்சினர் நடுங்கினர். ஆகி - மிகவும் அஞ்சி நடுங்கினவர்களாகி, ஆயிடை அப்பொழுதே; நஞ்சு இவர் வேலினான்பாதம் நண்ணினார் - நஞ்சு தடவப் பெற்ற வேற்படையையுடையவனாகிய சுவலனசடியரசனின் அடிகளைச் சென்று வணங்கினார்கள் (எ - று.)