(இ - ள்.) இறைவன் அரசர் கோமகன் - அந்நாட்டு மக்களுக்குத் தலைவனாக விளங்கும் அரசர்பெருமான், அமைச்சரோடு - அமைச்சர் களுடன்; பூங்கமழ் மண்டபம் பொலியப் புக்கபின் - அழகுவிளங்குகின்ற மந்திரசாலையானது விளக்கத்தையடையுமாறு உள்ளே நுழைந்தபிறகு, வீங்கு ஒளி மணிக்குழை மிளிர்ந்து வில் இட - மிகுந்த ஒளியையுடைய அழகிய குண்டலங்கள் விளங்கிச் சுடரைவீச; ஈங்கு இவை மொழிந்தனன் என்ப - இப்பொழுது மேலே கூறப்போகுஞ் செய்திகளைக் கூறினான் என்று சொல்வார்கள். ( எ - று.) என்ப என்பதை அசை நிலையாகக் கொள்ளினும் அமையும். அரைசர்; போலி. மண்டபம் இயற்கையில் அழகுடன் மிளிர்ந்ததாயினும், அரசன் சென்றவுடன் மேலும் அழகைப்பெற்றுத் திகழ்ந்ததென்று உணர்த்தற் பொருட்டுப், ‘பூங்கமழ் மண்டபம் பொலிய‘ என்றார். உரையாடும்போது தலையசைத்து, காதில் உள்ள குண்டலங்களும் ஆடி ஒளியை வெளிப்படுத்திற்றென்பர். ‘மணிக்குழைமிளிர்ந்து வில்லிட‘ என்றார். |