பக்கம் எண் :

பக்கம் : 411
 
 
578. இங்கு நின்றுபோ யிழிந்த சூழலும்
அங்கு வேந்தனை யணைந்த வாயிலும்
பொங்கு தானையான் புகன்ற மாற்றமுந்
தொங்கன் மார்பினாய் சொல்லு 1கோனெனா.
 

     (இ - ள்.) தொங்கல் மார்பினாய் - வெற்றிமாலையை அணிந்த மார்பையுடைய
அரசே!, இங்கு நின்று - யான் இவ்விடத்தினின்றும் புறப்பட்டு, போய் -
போதனமாநகர்க்குச் சென்று, இழிந்த - இறங்கிய, சூழலும் - புட்பமாகரண்டம் என்னும்
பொழிலின் பெற்றியும், அங்கு - அவ்விடத்தே, வேந்தனை - பயாபதி அரசனை, அணைந்த
வாயிலும் - சென்று கண்ட வழியும், பொங்கு தானையான் - சினத்தாற் கொதிக்கும்
பெரும்படைகளையுடைய அப் பயாபதி மன்னன், புகன்ற - எனக்குரைத்த, மாற்றமும் -
மொழியும், சொல்லுகேன் எனா - சொல்வேன் கேட்டருள்க என்று தொடங்கி, (எ - று.)

பொங்குதானை - மிகுந்தபடை எனினுமாம். மார்பினாய்! யான் இங்கு நின்றுபோய் இழிந்த
சூழலும், வேந்தனை அணைந்த வாயிலும், தானையான் புகன்ற மாற்றமும், சொல்லுகேன்
என்றான் என்க.
 

( 6 )

 
579. அள்ளி-லைச்செழும் பலவி னார்சுளை
முள்ளு டைக்கனி 2முறுகி விண்டெனக்
கள்ளு றைத்தொறுங் கழுமி யூற்றறா
வள்ளி லைப்பொழின் மகிழ்ந்து புக்கதும்.
 
 

      (இ - ள்.) அள் இலை செழும் பலவின் - செறிந்த இலைகளாற் றழைத்த
பலாமரத்தினது, ஆர் சுளை - நிரம்பிய சுளைகளையும், முள் - புறந்தோலின்கண்
முட்களையும், உடைக்கனி - உடைய பழம் முறுகி - முதிர்ந்து, விண்டு என -
வெடித்தனவாக அவை, கள் உறைத்தொறும் - தேனை இடையறாது துளித்தலால், கழுமி -
அத்தேன் பெருகி, ஊற்றறா - அருவியாகப் பாய்தலை ஒழியாத, வள்ளிலைப் பொழில் -
வளமிக்க இலைகளாற் செறிந்த புட்பமாகரண்டம் என்னும் பூம்பொழிலின்கண், மகிழ்ந்து -
மனமகிழ்ச்சிகொண்டு, புக்கதும் - புகுந்த செய்தியும், (எ - று.)

ஆர்சுளை - பொருந்தியசுளை எனினுமாம். முறுகி விண்ட பலாக் கனி மிகுதியாகத்
தேன்றுளித்தலால் என்க. பொறிகளுக்குப் பேரின்பததைப் பொழில் நல்கியதாகலின்
மகிழ்ந்து புக்கதும், என்றான்,

( 7 )


     (பாடம்) 1. நன்கெனா. 2. முறுதீ.