பக்கம் எண் :

பக்கம் : 42
 

     நெகிழினும் பொறாது. அல்லல்கூர் பெடை“ என்றார் நைடதத்தினும். காதலரைத்
துறந்த பெண்டிர்க்கு ஏனைய பெண்டிர் இரங்குதல் பெண்மையியல்பு; இதனை உலகியலிற்
காணலாம். மேலும்,

“மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர்
பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தார்“

எனவரும் பழம் பாடலானும் (தொல் - புறத் - 13 - மேற். நச்) உணர்க. இனி மாடங்களில்
அன்னங்களை வளர்க்கும் வழக்கத்தை “தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து,
நெடுமயிரெகினத் தூநிற ஏற்றை, குறுங்கால் அன்னமொடு உகளும் முன்றில்“ எனவரும்
நெடுநல்வாடையான் அறிக. ( 91-2 )

( 11 )

அரசர் தெருவழகு
47. 1விலத்தைகைப் பூந்துணர் விரிந்த கோதையர்
நலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய
அலத்தகக் 2குழம்புதோய்ந் தரச வீதிகள்
புலத்திடைத் தாமரை பூத்த போலுமே.
 
     (இ - ள்.) விலத்தகைப் பூந்துணர் - நீர்நிலையின்கண் உண்டான அழகிய
பூங்கொத்துக்கள்; விரிந்த கோதையர் - மலர்ந்துள்ள மாலை அணியப்பெற்ற
கூந்தலையுடைய பெண்கள்; நலம்தகை சிலம்பு அடி - நல்ல தன்மை யமைந்த
சிலம்பென்னும் காலணியை அணிந்த கால் அடிகளில்; நவில ஊட்டிய - பொருந்தும்படியாக
ஊட்டப்பெற்ற; அலத்தகம் குழம்பு தோய்ந்து - செம்பஞ்சுக் குழம்புதோயப்பட்டு; அரச
வீதிகள் - அந்நகரத்து அரண்மனைத் தெருக்கள்; புலத்திடை தாமரை பூத்தபோலும் -
புலத்திடத்தே தாமரைமலர் மலரப்பெற்றாற் போல விளங்கும். ( எ - று.)

விலம் - பிலம் என்பதன் மரூஉ; நீர்நிலை. தகை - அழகு மகளிர் அடிகளில்
ஊட்டப்பெற்ற செம்பஞ்சுக் குழம்பின் செந்நிறம் பட்ட இடங்கள் செந்தாமரை பூத்தாற்
போன்று விளங்குகின்றன என்க. மகளிர் அடி தாமரை மலர் போலுதலின் அவற்றின் சுவடு
தாமரை போன்று தோன்றின என்பது கருத்து, புலம், - வயல், இடம், திசை, திக்கு, நாடு,
அறிவு, துப்பு, நூல்.

 

( 12 )

(பாடம்) 1. விலத்துகைப் பூந்துணர், 2. கொழம்பு.