பக்கம் எண் :

பக்கம் : 548
 

     (இ - ள்.) களியவாய் விலங்கி நீண்டு - கரிய நிறமுடையனவாய் விலகி நீளியவாய்,
களிக்கயல் இரண்டு தம்முள் - களிப்புடைய இரண்டு கயல்மீன்கள் தம்முள் எதிர்ந்து,
பொரிய - போர்செய்தற்கு, போகின்ற போலும் - செல்வதை நிகர்த்த, பொங்கு அரி தடம்
கண் பேதைக்கு - மிக்க செவ்வரிபடர்ந்த அகன்ற கண்களையுடைய சுயம்பிரபையை, உரிய
மாலவற்குச் சென்று கொடுப்பன் என்று - மணம்புணர்தற்கு உரியவனான திவிட்டனுக்கு
அழைத்துக் கொடுபோய் மணம் செய்யக் கொடுத்திடுவேன் என்று, உலகம் காக்கும்
பெரியவன் - உலகத்தைக் காவல்செய்யும் பெருமையுடைய சடிவேந்தன், தமரோடு எண்ணி
- தன் அமைச்சரோடு ஆராய்ந்து தெளிந்து, கடிவினை - மணவினைக்குரிய செயல்களை,
பெருக்கலுற்றான் - செய்யத் தொடங்கினான், (எ - று.)

     பொரிய - பொர; போர்செய்ய. அரி - வரி. பேதை - சுயம்பிரபை. பெரியவன் - சடி.
தமர் - அமைச்சர் முதலியோர். கடிவினை - திருமணச் செயல்.
 

( 3 )

சடிமன்னன், பிரீதி வருத்தனன் முதலிய எண்மரையும்
அழைத்துத் தன் அரசியலை ஒப்புவித்தல்
1. பிரீதிவர்த்தனன்
830. கிளரொளி மாடக் கோயிற் கின்னரர் கெழுவ லோவா
வளரொளி வயங்கு தோன்றல் 1வருத்தமா னத்து மன்னன்
உளரொளி யுமிழும் பூணான் 2பிரீதிவர்த் தனனென் றோதும்
தளிரொளி தயங்கு மேனித் தாமரைச் செங்க ணானே.
 

      (இது தொடங்கி எட்டுச் செய்யுள் ஒருதொடர்) குளகம்.

     (இ - ள்.) இளர்ஒளி மாடக்கோயில் - ஒளிவீசும் மாடங்களையுடைய தன்
அரண்மனையின்கண், கின்னரர் கெழுவல் ஓவா - கின்னரர்கள் வந்து நெருங்குதலை
ஒழியாத, வளர் ஒளி வயங்கு தோன்றல் - வளர்கின்ற புகழாலே திகழ்தலுடைய பெரியோன்,
வருத்தமானத்து மன்னன் - வருத்த மானம் என்னும் நாட்டினை ஆளும் அரசனும்,
உளரொளி உமிழும் பூணான் - சலித்தற்றன்மையுடைய ஒளிவீசும்
அணிகலன்களையுடையவனும், பிரீதிவர்த்தனன் என்று ஓதும் - பிரீதிவருத்தனன் என்று
புகழ்ந்து கூறப்படுபவனும், தளிர் ஒளி தயங்குமேனி - தளிர்போன்ற ஒளிதிகழும்
திருமேனியை உடையவனும், தாமரைச் செங்கணானும் - செந்தாமரைபோலச் சிவந்த
கண்களையுடையவனும்.
 


     (பாடம்) 1. வகுத்த. 2. விருதி மாவருத்த னென்பான்.