(இ - ள்.) வார் அணி முரசம் ஆர்ப்ப - வாரால் இறுக்கப்பட்ட அழகிய முரசம் முழங்கவும், வரிவளை வயிரோடு ஏங்க - வரிகள் பொருந்திய சங்கங்கள் கொம்புகளோடு ஒலிப்பவும், தார் அணி மறவர்சூழ - வெற்றிமாலை சூடிய போர்மறவர்கள் தன்னைச் சூழ்ந்து வரவும், தமனியக் கலங்கள் தாங்கி - பொன் அணிகலன்களைப் பூண்டு, ஆனைமேல் - சிறந்த யானையிலமர்ந்து, அருக்ககீர்த்தி - சடிமன்னன் மகனாகிய அருக்ககீர்த்தி, ஆர் அணி உருவத்திண்தேர் - ஆர்க்கால்களையுடைய எழில்மிகு தோற்றம் வாய்ந்த திண்ணிய தேர்முதலிய, நிர் அணிகடலந்தானை - நீர்மிக்க கடல்போன்ற தன் படைகளை, நிலம்நெளி பரப்பி நின்றான் - நிலம் முதுகுளுக்குமாறு பரப்பி நின்றான், (எ - று.) நெளிய என்னும் எச்சம் ஈறுகெட்டு நெளி என நின்றது. அருக்ககீர்த்தி - சடியரசன் மகன். முரசம் ஆர்ப்பவும், வளை வயிரோடு ஏங்கவும், மறவர் சூழவும், அருக்கக்கீர்த்தி கலன்கள் தாங்கி, தானையை நிலம் நெறியப் பரப்பி யானைமேல் நின்றான் என்க. |
(இ - ள்.) சேனை பண் அமைத்துச் சென்று - இங்ஙனம் படை ஒப்பனை செய்யப்பட்டுப்போய், திருக்கடை செறிந்த போழ்தில் - அரண்மனை வாயிலிற் கூடியவுடனே, மாண்பின் தாரவர் - மாட்சிமையுடைய மாலையணிந்தவரும், தானையுள்படுநர் - படையுள் இருந்து தொழில் செய்வோரும் ஆகிய தூதுவர்கள், தொழுதுகூற - சடியரசனை வணங்கிச் சொல்ல, வேல்நவில் தடக்கை வேந்தன் - வேற்படையை ஏந்திய பெரிய கையையுடைய சடியரசன், விண் இயல் விமானம் ஒன்று - விசும்பில் இயங்கும் இயல் புடையதொரு விமானத்தை, வானவில் உமிழ்ந்து மின்ன - வானவில்லைப்போன்று பல்வேறு ஒளிகளையும் பரப்பி மின்னும்படி, |