இவனுடைய மனைவியர்களுக்கும்; இங்கு - இப்படி; ஒருவர் தம்மேல் ஒருவர்க்கு உள்ளம் ஓட - ஒருவர்மேல் ஒருவர்க்கு மனது செல்ல; முன்னவன் - பழைமையுள்ள வனாகிய; அம்மொய்ம்மலர்க் கணையினான் - வலிய மலர்க்கணைகளையுடையவனான அந்தக்காமன்; புணர்த்த ஆறு என்னைகொல் - செய்தவகை எவ்வாறோ? (எ - று.) மன்னனுக்கு அவனுடைய மனைவியர் உயிராக அமைந்து நின்றார்கள். அம்மனைவியர்க்கோ மன்னன் உயிராக அமைந்து நின்றான். இவ்வாறு ஒருவர்க்கொருவர் உயிராக அமைந்து நிற்குமாறு காமதேவன் செய்த சூழ்ச்சி தான் யாதோ என்றார். முன்னவன் உயிர்த்தோற்றங்கட்குக் காரணமாக நிற்பவன். இல்வாழ்வாராகிய ஆடவரும் பெண்டிரும் இவ்வாறு ஒருவர்க்கொருவர் உயிர்போல் அமைந்து நின்று இல்லற நடத்தலே தலையாய அறமாகலின் இவ்வாறு வியந்து கூறினார். |
( 31 ) |
மங்கையர் மன்னனைப் பிணித்து வைத்தல் |
67. | சொற்பகர்ந் துலகங் காக்குந் தொழில்புறத் தொழிய வாங்கி மற்பக ரகலத் தானை மனத்திடைப் பிணித்து வைத்தார் பொற்பகங் கமழப் பூத்த தேந்துணர் பொறுக்க லாற்றாக் கற்பகக் கொழுந்துங் 1காம வல்லியங் கொடியு மொப்பார். |
(இ - ள்.) கமழ - மணம்வீச; அகம் - தன்னிடத்திலே; பூத்த - அலர்ந்த; பொற்பு - அழகாகிய; தேந்துணர் பொறுக்கல் ஆற்றா - தேனையுடைய பூங்கொத்தைத் தாங்கமாட்டாது; கற்பகக்கொழுந்தும் - கற்பக மரத்தின் இளந்தளிரையும்; காமவல்லி அம்கொடியும் - காமவல்லி என்னும் அழகிய பூங்கொடியையும்; ஒப்பார் - ஒத்தவர்களான அவ்விரண்டு மங்கையரும்; சொல்பகர்ந்து உலகம் காக்கும் தொழில் - கட்டளைச் சொற்களைக் கூறி உலகத்தைப் பாதுகாக்கும் வேலையை; புறத்து ஒழியவாங்கி - அமைச்சர் முதலாயினாரிடத்திலே நீக்கி; மல்பகர் அகலத்தானை - மல்தொழில் தன்மையை வெளிப்படுத்துகின்ற அகன்ற மார்பையுடையவனான பயாபதி மன்னனை; மனத்து இடை பிணித்துவைத்தார் - உள்ளத்திலே கட்டி வைத்தார்கள். (எ - று.) |
|
(பாடம்) 1 காமவல்லியின் கொடி. |