பக்கம் எண் :

பக்கம் : 6
 

     என்பவாகலான் அவ்வாகுபெயர்ப் பொருட்கேற்ற வினைகொடுத்துத் தமிழ் நூற்கலுற்றேன் என்றார். இங்ஙனமே கம்பநாடரும் “நொய்தின் நொய்யசொல் நூற்கலுற்றேன்“ என்றும் (கம்ப. 1 - 8) “ஆசைபற்றி அறையலுற்றேன்“ என்றும் (கம்ப. 1 - 7) ஓதுதல் உணர்க. நங்கள் போல்வார் - எம்மனோர்.

( 3 )

 
நூலரங்கேற்றிய களனும்: கேட்டோரும்
4. நாமாண் புரைக்குங் குறையென்னிது நாம வென்வேல்
தேமா ணலங்கற் றிருமால்நெடுஞ் சேந்த னென்னும்
தூமாண் தமிழின் கிழவன்சுட ரார மார்பின்
கோமா னவையுட் டெருண்டார்கொளப் பட்ட தன்றே.
 
     (இ - ள்.) இது - இத்தொடர்நிலைச் செய்யுள் நூல்; நாமவென்வேல் - பகைவர்க்கு அச்சத்தையுண்டாக்கும் வெற்றி வேலையும்; தேம்மாண் அலங்கல் - தேன்நிரம்பிய மலர்மாலையினையும் உடையவனும்; திருமால் - திருமாலின் அம்சமுடையவனும்; நெடுஞ் சேந்தன் என்னும் - நெடுஞ்சேந்தன் என்னும் திருப்பெயரை உடையவனும்; தூமாண் தமிழின் கிழவன் -தூய்மையால் மாட்சிமையுடையதாகிய தெய்வத் தமிழ் மொழிக்கு உரிமையுடையோனும்; சுடர் ஆரமார்பின் - ஒளிருகின்ற ஆரத்தையணிந்த மார்பையுடையவனும்; கோமான் - மன்னர்மன்னனும் ஆகிய பாண்டியனுடைய; அவையுள் - நல்லவையின்கண் வீற்றிருந்த; தெருண்டார் - ஆன்றவிந்தடங்கிய சான்றோராகிய நல்லிசைப்புலவர்களானே; கொளப்பட்டது - மதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது; நா - இங்ஙனமாகலின் எஞ்சிய தெருளாதார் நா; உரைக்கும் மாண்பு என் குறை என் - இதன் திறத்தே கூறுதற்குக் கிடந்த சிறப்புத் தான் யாது? குற்றந்தான் யாது? அவர் கூறும் மாண்பும் குறையும் எம்மாற் பொருளாக மதிக்கப்படமாட்டா, (எ - று.)

அவர் கூறும் மாண்பும் குறையும் எம்மாற் பொருளாக மதிக்கப்படமாட்டா என்பது குறிப்பெச்சம்.