மூன்றாவது குமாரகாலச் சருக்கம் |
[இச்சருக்கத்தின்கண், பயாபதி மன்னனுக்கு விசயன் திவிட்டன் என்னும் இருமக்கள் பிறந்து வளர்ந்து சிறப்படைவதும்; அரசன் அரசவையில் இருக்கும் ஒருநாள் நிமித்திகன் ஒருவன் வந்து; அரசன் கனவு கண்டதைக் கூறி அதன் பயனை உரைப்பதும்; அதைக் கேட்டு மகிழும் அரசன், புட்பமா காண்டம் என்னும் பொழிலிடத்தே ஓர் அழகிய இருக்கை அமைத்துத் துருமகாந்தன் என்பவனைக் காவல் வைத்தலும் பிறவுங் கூறப்பெறுகின்றன.] |
தேவர்கள் இருவர் மண்ணுலகில் தோன்றுதல் |
70. | ஆங்கவர் திருவயிற் 1றமரர் கற்பமாண் டீங்குட னிழிந்துவந் திருவர் 2தோன்றினார் வாங்குநீர்த் திரைவளர் 3வளையு மக்கடல் ஓங்குநீர் நிழலுமொத் தொளிரு 4மூர்த்தியார். |
(இ - ள்.) வாங்கு - உலகத்தை வளைந்த; நீர்த்திரை - நீரையுடைய கடலினது அலையிலே; வளர் - பிறந்து வளருகிற; வளையும் - சங்கையும்; அக்கடல் - அக்கடலினது; ஓங்கும்நீர் நிழலும் ஒத்து - உயர்ந்த நீரினது நிறத்தையும் ஒத்து; ஒளிரும் மூர்த்தியார் - முறையே வெண்மையாகவும் கருமையாகவும் விளங்குகின்ற வடிவத்தை யுடையவர்கள்; அமரர் கற்பம் ஆண்டு - தேவர்கள் வாழும் தேவலோகத்தில் அரசாட்சி செய்திருந்து; ஈங்கு - இப்பொழுது; உடன் இழிந்துவந்து - ஒன்றாக நிலவுலகத்தையடைந்து; அவர் திருவயிற்றுத் தோன்றினார் - மிகாபதி சசி என்பவர்களின் திருவயிற்றிலே பிறந்தார்கள். (எ - று.) தேவர்கள் வாழ்தற்குக் கற்பிக்கப்பட்ட இடமாகிய கற்பலோகம் சௌதர்மம் (1) ஈசானம் (2) சனற்குமாரம் (3) மகேந்திரம் (4) பிரமம் (5) பிரமோத்தரம் (6) இலாந்தவம் (7) காபிஷ்டம் (8) சுக்கிரம் (9) மகாசுக்கிரம் (10) சதாரம் (11) ஸகஸ்ராரம் (12) ஆநதம் (13) பிராணதம் (14) ஆரணம் (15) |
|
(பாடம்) 1. அமரகற்பம், 2. தோற்றினார், 3. வளையுமாக்கடல், 4. நீற்றினர். |