பக்கம் எண் :

பக்கம் : 713
 

     குலத்தாராகிய மகளிர்களும் ஏத்துதற்குரிய பூங்கொம்பை ஒத்த அச்சுயம்பிரபை
நல்லாளும், முல்லைக்கொடி ஒத்தாள் - அம்முகிலால் போற்றப்பட்ட முல்லைக்கொடியைப்
போன்று, திருவாய் மலர்ந்தாள், (எ - று.)

நகுவிக்கும் மாரி வந்ததோர் மாரி எனத் தனித்தனி கூட்டுக. முகில் தனது குளிர்ந்த
மழைத்துளியை உதிர்த்து, முல்லையைத் தழைத்து மலரச்செய்தல் போன்று, தனது குளிர்ந்த
நலம்பாராட்டுரையாகிய மொழியாலே, நங்கை முறுவல்பூப்பச் செய்தனன் என்பது கருத்து.
குலம் பாராட்டுதலாவது :
“போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்”

கண்ணகியாரை மாதரார் தொழுதேத்தினாற்போன்று தன் குலத்து மாதரார் தொழுதேத்தல்.
 

( 297 )
காதலர் பொழிலை எய்துதல்
1124. தேனார் கோதைச் செங்கயல் வாட்கண் சிறைகொள்ள
ஊனார் வேலா னுள்ளமி ழந்தா னுழையாரை
மேனாள் போல மெய்ப்பட மாட்டான் விளையாடும்
கானார் சோலைக் காவகப் புக்கான் கமழ்தாரான்.
 

     (இ - ள்.) கமழ்தாரான் - நறுமணங்கமழும் மலர்மாலையணிந்த திவிட்டநம்பி, தேன்
ஆர் கோதை செங்கயல் வாட்கண் சிறைகொள்ள - தேன்பொருந்திய மலர்மாலையையுடைய
சுயம்பிரபையினுடைய சிவந்த கயலையும் வாளையும் நிகர்த்த கண்கள் தன் நெஞ்சைப்
பிணித்துக் கொள்ளுதலாலே, ஊன் ஆர் வேலான் - ஊன் பொருந்திய
வேற்படையுடையவன்; உள்ளம் இழந்தான் - தன் நெஞ்சம் இழக்கப் பெற்றவனாய்,
மேல்நாள்போல - மணம்புணர்தற்கு முன்னர் நிகழ்ந்த நாட்களிற் போல, உழையாரை
மெய்ப்பட மாட்டான் - தன் தோழர்களுடனே தலைப்பட்டு அளவளாவுதல் ஒழிந்தவனாய்,
விளையாடும் கான் ஆர் சோலைக் காவகம் புக்கான் - விளையாடுதற்குரிய மணமிக்க
பூஞ்சோலையாகிய பொழிலின்கண்ணே சுயம்பிரபையோடே புகுந்தான்,
(எ - று.)

வேலான், கோதையின்கண் சிறை கொள்ளுதலாலே, உள்ளம் இழந்தவனாய்த் தன்
உழையாரைப் பண்டுபோலத் தலைப்பட்டுப் பயிலாது, நங்கையோடே பூம்பொழிலகத்தே
புக்கான், என்க.

( 298 )