பக்கம் எண் :

பக்கம் : 726
 

     அவ்வாறு வியந்த அரிகேது, காணாதாற் காட்டுதல் பயமின்றாம், நம்பியின் ஆற்றலை
இவன் நேரிற் காணும்போது அறிக! யாம் கூறின், இவனைக் கனற்றுவதன்றி, தேற்றுதலாகாது
என்று கருதிச் செவ்விக்கேற்பக் கைதொழுது அமையயலானான் என்க.

          “காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான்
          கண்டானாம் தான்கண்ட வாறு"

     என்னும் திருக்குறட் கருத்தை அரிகேது, நினைந்தான் போலும்.
 

( 14 )

 
1145. அமர்நனி தொடங்கு 1மேனும்
     ஆர்த்துநீர் கொணர்மினென்று
குமரனைக் குறித்த வெஞ்சொற்
     குறைசென்று முடியு மெல்லைத்
தமருளங் கொருவன் வந்து
     சக்கிர வாளந் தன்னுள்
நமரது நிலையு நங்கை
     போந்தது நடுங்கச் சொன்னான்.
 
     (இ - ள்.) அமர்நனி தொடங்கு மேனும் - போர்த்தொழில் மிகவும்
உண்டாகுமாயினும் ஆகுக, ஆர்த்துநீர் ஈண்டு கொணர்மின் என்று - நீர் சென்று
அத்திவிட்டனைக் கட்டிக்கொண்டு இங்கே வாருங்கள் என்று, குமரனைக் குறித்த
வெஞ்சொல் - திவிட்டனைக் குறிக்கொண்டு எழுந்த சுடுசொற்களில், குறைசென்று முடியும்
எல்லை - எஞ்சிய சொற்கள் கூறிமுடிதற்கு முன்னரே, தமருள் அங்கு ஒருவன் வந்து -
அச்சுவகண்டனைச் சார்ந்தவருள் அவ்விடத்தே ஓரொற்றன் வந்து, சக்கிரவாளந்தன்னுள் -
இரதநூபுர சக்கிரவாளத்துள் வாழும், நமரதுநிலையும் - நம்மவர்களின் நிலைமையையும்,
நங்கை போந்ததும் - சுயம்பிரபை போதனமாநகர் வந்த செய்தியும், நடுங்கச் சொன்னான் -
அவ்வவையத்தோர் அச்சுவகண்டன் சினம் யாதாங்கொல் என்று அஞ்சி நடுங்குமாறு
கூறினான், (எ - று.)

     பெரும்போர் நிகழ்வதாயினும் ஆகுக; நீயிர் சென்று திவிட்டனைக் கட்டிக்கொண்டு
இங்கு வருதிர் என்றெழுந்த சொல்முடியுமுன், இரதநூபுரச் சக்கிரவாளத்திருந்து வந்த
ஓரொற்றன், நம்மனோர் நிலைமையும், சுயம்பிரபை போதனத்திற்குப் போந்ததும்
அச்சுவகண்டனுக்குச் சொன்னான் என்க..
 

( 15 )


     (பாடம்) 1ஆகுமென்று