பக்கம் எண் :

பக்கம் : 75
 

     அரசன் படுக்கையை விட்டெழுந்து முகத்தைக் கழுவி மங்கலப் பொருள்களைப்
பார்த்தவுடன் அந்தணர்கள் அங்குத் தோன்றி மலர்களைச் சொரிந்து வாழ்த்துரைகளைக்
கூறினார்கள். பயாபதி மன்னன் அவர்களைப் போற்றி வணங்கினான். அரசர்
துயிலுணர்ந்தவுடன் முனிவரை வணங்குதலும் அவர் வாழ்த்தலுமாகிய வழக்க முண்மையை,

          “மகடூஉத் துறந்த மாசறு படிவத்துத்
          துகடீ ராளர்க்குத் துளக்கிய முடியன்
          மலர்கண் ணளைஇய மந்திர நறுநீர்
          பலருடன் வாழ்த்தப் பண்புளி யெய்தி“

எனவரும் பெருங் கதையானும் (1 - 34 : 17 - 20) உணர்க.

     அந்தணராவார் எவ்வுயிர்மாட்டுந் தண்ணருள் காட்டும் சீரியோராவார்.
அத்தகையோர் பிரமப் பொருளையுணர்ந்து நிற்கும் முனிவரராகிய பெரியோர் என்க.
ஆசஸ் என்னும் வடசொல் ஆசு என ஈறு திரிந்த தென்பர். தேவர்மாட்டு : மாட்டு
ஏழனுருபு.

( 20 )

வாயில் காப்போர் உலகு காப்போன்
வரவை எதிர்பார்த்தல்
90. விரையமர் கோதையர் வேணுக் கோலினர்
உரையமர் காவல்பூண் கடையி னூடுபோய்
முரசமர் முழங்கொலி மூரித் தானையன்
அரசவை மண்டப மடைவ 1தெண்ணினார்.
 
     (இ - ள்.) விரைஅமர் கோதையர் - மணம்பொருந்திய மாலையை அணிந்தவரும்;
வேணுக்கோலினர் - மூங்கிற்கோலைக் கையிலுடையவர் களுமாகிய காவன்மகளிர்;
உரைஅமர் - புகழ் பொருந்தியதும்; காவல்பூண் கடையின் ஊடுபோய் - தாங்கள்
காத்தலைச் செய்கின்றதுமாகிய வாசல்களின் ஊடே உலாவி நின்று; முரசு அமர்
முழங்குஒலி மூரித்தானையன் - முரசுகள் பொருந்தி முழங்குகின்ற ஒலியோடுகூடிய
பெருமை பொருந்திய படைகளை யுடைய பயாபதி அரசன்; அரசு அவைமண்டபம்
அடைவது - திருவோலக்க மண்டபத்திற்கு வருதலை; எண்ணினார் - எதிர்பார்த்தார்கள்.
(எ - று.)
 

     (பாடம்) 1. எண்ணினான்.