பக்கம் எண் :

பக்கம் : 95
 

பளிங்குமேடை யமைத்துக் காவல்வைப்போம் என்றல்

116. நாமினி மற்றவன் மொழிந்த நாளினால்
தேமரு சிலாதலந் திருத்தித் தெய்வமாம்
1தூமரு மாலையாய் துரும காந்தனைக்
காமரு பொழிலிடைக் காவல் வைத்துமே.
 

     (இ - ள்.) தெய்வமாம் - தெய்வத்தன்மை பொருந்திய; தூமரு மாலையாய் -
தூயமணம் வீசும் மாலையை அணிந்தவனே; நாம் இனி - நாம் இனிமேல்; அவன்மொழிந்த
நாளினால் - அந்நிமித்திகன் கூறிய நாளில், தே மரு சிலா தலம் - இனிமை பொருந்திய
பளிங்கு மேடையை; திருத்தி - திருத்தமாக அமைத்து; துருமகாந்தனை - துருமகாந்தன்
என்பவனை; காமரு பொழிலிடை - விருப்பத்தை யுண்டுபண்ணுகிற பொழிலினிடத்தே;
காவல்வைத்தும் - விஞ்சையர் தூதனது வரவையறிதற் பொருட்டுக் காவலாக வைப்போம்.
ஏ - ஈற்றசை. மற்று - அசை. (எ - று.)

     அனைவோர்க்குந் தெய்வம் இலைமுகப் பைம்பூணிறையாதலால், பயாபதி மன்னன்,
“தெய்வமாம் தூமரு மாலையாய்“ என்று விளிக்கப் பெற்றான். தெய்வம் ஆம் தூமருஎன
எடுத்து - தெய்வத் தன்மையுள்ள நறுமணம் என்றுங் கொள்ளலாம். துருமகாந்தன் என்னும்
வட சொல்லுக்குப் பொருள் மரங்களிடத்தில் விருப்பமுடையவன் என்பதாம். வைத்தும்
உளப்பாட்டுத் தன்மைப் பன்மை.
 

( 47 )

அரசன் கட்டளை பிறப்பித்துவிட்டு அந்தப்புரஞ் செல்லுதல்
117. என்றவர் மொழிந்தபி னிலங்கு பூணினான்
நன்றது பெரிதுமென் றருளி நாடொறும்
சென்றவன் காக்கென மொழிந்து தேங்குழல்
இன்றுணை யவர்கடங் கோயி லெய்தினான்.
 

     (இ - ள்.) என்று அவர் மொழிந்தபின் - மேற்பாட்டில் முடித்தாங்கு அமைச்சர்கள்
கூறிய பிறகு; இலங்கு பூணினான் - விளங்குகின்ற அணிகலன்களை யணிந்த பயாபதி
மன்னன்; அது பெரிதும் நன்று என்று அருளி - நீங்கள் கூறியாங்குப் புரிதல் மிகவும்
நல்லது என்று கூறி; நாள்தொறும் சென்று அவன் காக்க என மொழிந்து - தினந்தோறும்
 


     (பாடம்) 1. தூமரு மாலை யான்.