பக்கம் எண் :

பக்கம் : 97
 

நான்காவது
இரதநூபுரச் சருக்கம்

     இரதநூபுரம் ஒன்பது வித்தியாதர நகரங்களில் ஒன்று. இச்சருக்கத்தின்கண்
சேடிநாட்டின் சிறப்பும், அதன் தலைநகரான இரதநூபுரத்தின் சிறப்பும், அந்நகரின்கண்
இருந்து ஆட்சிபுரியும் சுவலனசடி யென்னும் அரசனுடைய அரசியல் நலமும், அவன்
மக்களுள் சுயம்பிரபை என்பவளின் பெண்மை நலமும், அரசன் வேனில் நுகர்வு குறித்துப்
பூஞ்சோலை சென்று இன்புறுதலும், சாரணரைக் கண்டு அறங்கேட்டலும், அவன்மகள்
சுயம்பிரபை சக்கரவாளமென்னும் நோன்பு நோற்று மாண்புறுதலும், அவள் மாண்புகண்டு
அவட்குக் கணவனாவான் யாவன் என வேந்தன் தன் மனத்தே பலபட நினைத்து,
அமைச்சர் முதலிய சான்றோரைத் தன் மந்திர சாலைக்கு வருமாறு ஏவலரை விடுத்தலும்
பிறவுங் கூறப்படுகின்றன.
 

நுதலிப்புகுதல்
119. புரிசை நீண்மதிற் போதன மாநகர்
அரசர் வார்த்தையவ் வாறது நிற்கவே
விரைசெய் வார்பொழில் விஞ்சையர் சேடிமேல்
உரையை யாமுரைப் பானுற நின்றதே.
 
     (இ - ள்.) புரிசை நீள்மதில் - உறுப்புக்களமைந்த நீண்ட மதிலாற் சூழப்பெற்ற;
போதனமா நகர் அரசர் வார்த்தை - போதனமாநகரத்து அரசரது செய்தி; அவ்வாறு அது
நிற்க - அத்தகையது, இனி அச்செய்தி நிற்க; விரைசெய் வார்பொழில் -
மணத்தையுண்டாக்குகின்ற நீண்ட பொழிலாற் சூழப்பெற்ற; விஞ்சையர் சேடிமேல் உரை -
வித்தியாதர உலகத்தின்கண் நிகழ்ந்ததாகிய செய்தி; யாம் உரைப்பான் உறநின்றது - யாம்
கூறுதற்குப் பொருந்தி நின்றது. (எ - று.)

     போதனபுரத்தில் வாழ்கின்ற அரசனான பயாபதியும் அவன் மக்களும்
ஆகியோருடைய செய்தியானது அவ்வாறு நிற்க; இனி விஞ்சையர் உலகின் செய்திகளை
நாம் சொல்லத் தொடங்குவோம் என்பதாம். வார்த்தை - செய்தி;