பக்கம் எண் :


தலவிசேடப் படலம் 133


     திருவோலக்கங் கொண்டருள்கையில் வெண்ணிறமும், பனியும் நிறைந்த
மலையரையன் ஈன்ற, மயிலிறகின் அடியினை யொத்த சிறிய பற்களையும்
சிவந்த வாயையும், அரும்பிய கொங்கையையும் தெய்வக் கற்பினையும்
திருந்திய அணிகளையும் உடைய உலகைப் பயந்த செல்வி மும்மூர்த்திகள்
காணாப் பெருந்தகையாகிய சிவபிரான் திருவடிகளிற் பணிந்து ஈதொன்றைப்
பேசத் தொடங்கினள்.

     சிவபிரான், மும்மூர்த்திகளுக்கப்பாற்பட்டவன் எனச் சபாநாயகர்
தோத்திரத்து விளக்கினார். ‘சங்கார காரணனாயுள்ள முதலையே’ (சிவஞா.
முதற்) எனப் பொதுப்படக் கூறாது விதந்தோதியதற்குப் பன்னிரு
திருமுறைகளினின்றும் மேற்கோள் காட்டி மும்மூர்த்திகளின் வேறாவன்
முதல்வன் என ஆசிரியர் விளக்கியிருத்தல் நினைவு கூர்க. உயிர்களுக்கு
ஆக்கம் வினவலின், உலகீன்ற செல்வி என்றனர்.

உமாதேவியார் வினா

கடப்படும் வீடு பேறுன் திருவடிக் காட்சி தன்னால்
கிடைப்பதாம் மறைஈ றாய்ந்து கிளர்தவம் தியானம் நிட்டை
நடைப்படி முதிர்ந்து வாய்ந்த நல்லவர்க் கன்றி உன்றன்
அடித்துணை காண்டல் ஏனோர்க் கரிதரி தாகும் அம்மா.   11

     வேதமுடிபினை ஆராய்ந்து விளங்குகின்ற தவமும், தியானமும்,
சமாதியும், முறைப்படி முதிர்ந்து கைகூடிய நல்லவர்க்கு உனது திருவடிக்
காட்சியால் முறைப்பட முத்திபெறுதல் வாய்ப்பதாம்; அத்தகையோர்க் கன்றி
ஏனையோர்க்கு உன்னுடைய இணையடிகள் தரிசித்தல் பெரிதும் அரிதாகும்.
நல்லார்-கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து முதிர்ந்தோர். (சிவஞா. மங்கலவாழ்த்து)
அரிது அரிது, அடுக்கு துணிவின்மேற்று.

ஏனையோர் விலங்கு புட்கள் இங்குனைக் கண்டு முத்தி
மேனிலத் துறுவ தெவ்வா றென்றனள் வினோத லோடும்
ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமா கருணை கூர்ந்து
மானமர் கரத்துப் புத்தேள் வாய்மலர்ந் தருளும் மன்னோ.   12

     ஏனையோரும், மிருகங்களும், பறவைகளும் இவ்விடத் துன்னைத்
தரிசித்து முத்தியாகிய மேலுலகை உறுதல் எங்ஙனம் என்று வினாவிய
அளவிலே, உடம்பு கொண்ட உயிர்கள் யாவும் பிழைக்குமாறு திருவுள்ளம்
வைத்து மானேந்திய திருக் கரத்தினையுடைய சிவபிரான் திருவாய்மலர்ந்து
அருள் செய்வர்.

சிவபெருமான் விடை

அரிபரந் தகன்ற உண்கண் அலர்முலை அணங்கு கேள்யாம்
பரவெளிப் பரப்பின் வைகும் பண்பினேம் உலகம் எங்கும்
விரவியே நிறைந்து நிற்பேம் விளங்கும்எம் நாலாம் பாதம்
தரைமுதல் உலகாம் மூன்று பாதம்வான் தலத்து மேவும்.     13