பக்கம் எண் :


192காஞ்சிப் புராணம்


ஒருமுறை பத்து நூறா யிரமுறை உனதாள் போற்றி
மருவரும் பொருளே போற்றி மறுவலும் போற்றி போற்றி
இருள்நிற மிடற்றாய் போற்றி யென்றுநாத் தழும்ப ஏத்தித்
திருமலர்க் கடவுள் போற்றச் சிவபிரான் அருளிச் செய்யும்.  42

     ஒரு முறை, பத்து முறை, நூறு முறை, ஆயிர முறை உன்னுடைய
திருவடிகளுக்கு வணக்கம், எப்பொருளிலும் உடனாய் நிற்கும் அரிய
பொருளே வணக்கம். மறுமுறையும் வணக்கம், வணக்கம், திருநீலகண்டனே
வணக்கம் என்று பிரமன் துதித்துப் போற்றச் சிவபிரான் அருளிச் செய்வர்.

இறைவன் வரங் கொடுத்தருளல்

உவந்தனம் மறையோய் உன்றன் பத்தியின் உறுதி நோக்கிச்
சிவந்தரும் எம்பால் நீமுன் வேட்டவா திருமா லோடும்
பவந்தரும் உலக மெல்லாம் படைத்தியால் என்று நல்கத்
தவந்திகழ் வேதன் மற்றும் இதுஒன்று தாழ்ந்து வேண்டும்.  43

     வேதியனே! உன்னுடைய பேரன்பின் பிறழாமையை நோக்கி
மகிழ்ந்தனம், நன்மையைச் செய்யும் எம்மிடை நீ முன்னர் விரும்பிய வாறு
திருமாலொடும் பிறப்புப் பெறும் உலக முழுதும் சிருட்டி செய்வாயாக என்று
அருள் செய்யத் தவத்தால் விளங்குகின்ற பிரமன் மேலும் ஈதொன்றைத்
தாழ்ந்து வேண்டுவான்.

என்றன் ஆத் தான மாக யான்உறை இருக்கை தன்னை
உன்றன்ஆத் தான மாகக் கோடலான் உம்பர் ஏறே
நன்றும்இத் தானம் என்றும் நவில்சிவாத் தானப் பேரால்
நின்றிட இங்கு நாளும் நீஇனி துறைதல் வேண்டும்.     44

     என்னுடைய இருப்பிடமாக யான் உறைகின்ற இவ்விருக்கையை
உன்னுடைய இருப்பிடமாகக் கொள்ளுதலினால் தேவர் தலைவனே! பெரிதும்
இவ்விடம் என்றும் பேசப்பெறும் சிவாத்தானம் எனும் பெயரால் நிலைபெற
இங்கு எக்காலத்தும் நீ இனிதாக எழுந்தருளியிருத்தல் வேண்டும்.

நின்னருட் குரியே னாகி நின்பணி தலைநின் றானா
உன்னடி யிணைக்கீழ்ப் பத்தி உலப்புறா தடியேன் என்றும்
நன்னெறி ஒழுகச் செய்யாய் நவில்சிவாத் தானத் தெய்தி
என்னரே யெனினும் நின்னை ஏத்தினோர் உய்யக் கோடி.  45

     நின்னருளிற்குப் பாத்திரனாகி நின் அருள் தொண்டில் தலைநின்று
உன்னுடைய திருவடிகளின்கீழ் நீங்காத பேரன்பு கெடாது அடியன்
எந்நாளும் திருநெறியில் ஒழுகுமாறு அருளைச் செய்வாய். சிவாத்தானம்
எனப்படும் இங்கெய்தி நின்னைத் துதித்தோர் எத்துணைக் கீழ் மக்களெனினும்
அவரையும் உய்யக்கொள்வாய்.

     இறைவனிடத்துப் பேரன்பும், நிலைபெற ஒழுக்கில் நிற்றலும் அவனே
அருள் செய்யவேண்டு மாகலின் குறையிரந்தனர். என்னரே எனினும்
என்பதன் பொருளை ‘என்னரே யாயினும் யாவதொன் றெண்ணுதல்‘ (கந்த
புராணம்) என்புழிக் காண்க.