தினைப்புனம், உழுதல் முதலியவற்றால் வருத்திய செயல்களை மனங்கொள்ளாமல், மரமுதற் சுமைகளைத் தவிர்த்த நன்றியைக் கடைப் பிடித்துக் குறவர்களுக்குப் புன்செய்ப்பயனை நிரம்பக் கொடுக்கும். உயர்ந்தோர் பிறர் தமக்குச் செய்த தீங்குகளை மறப்பர்; நலங்களைப் பாராட்டுவர் ஆதலின் பெரியோர் தினைப் புனத்திற்கு உவமமாயினர். இதை-தினைப்புனம், வேறு நன்றி-பகைமைக்கு வேறாய நன்றி. வேட்டை மேற்புகு வார்க்குநல் வினையுந்த மடவார் கூட்டம் வாய்க்குமச் சாரலில் தினைக்குரற் கெய்துஞ் சேட்டி ளங்கிளிக் குலங்களத் தெரிவைமார் ஓப்பும் பாட்டி சைத்திறம் ஒளியிருந் தனுதினம் பயிலும். 41 | வேட்டை மேற்புகுகின்ற தலைவர்க்கு முன்னைநல்வினை செலுத்தச் சென்று, தலைவியரைக் கண்டு உழுவலன்பு செலுத்தக் கூடும் மலைச் சாரல்களில், குறப்பெண்கள் தினைப்புனத்துட் கிளிகளை ஓட்ட அக்கிளிகள் புறம் செலாது ஒளிந்திருந்து கிளிகடி பாடல்களை நாடொறும் பயிலும். கூட்டம்-புணர்ச்சி. ஓப்பும்-துரத்தும். சாரல் என்னும் முதல் பொருளும், தினையாகிய உணாவும், கிளியாகிய பறவையும், கிளியோப்புதல் என்னும் செய்தியும், புணர்தல் என்னும் உரிப்பொருளும் வந்தன. நங்கு லத்தரு வாழ்க்கையைக் கெடுத்துநம் இருக்கை தங்க ளுக்கெனக் கொண்டஇவ் ஏனல்கள் தம்மை இங்கண் வாட்டுதும் என்பதோர் சூழ்ச்சியெண் ணியபோல் அங்கண் எஞ்சிய வேங்கைகள் போதுசெய் தலரும். 42 | வேங்கை மரங்களை அழித்து அவ்விடத்து தினையை விதைத்தனர் குறவர். தப்பிய வேங்கைகள் தம் இனத்தை அழித்து அவ்விடத்தைக் கைப்பற்றிய தினைப்பயிரை அழிக்கப் பூத்தனபோல மலர்ந்தன. வேங்கை, பூத்தவழி தினை அறுப்பது வழக்கு. போது-மலரும் பருவத்து அரும்பு. ஏனலென்னும் உணாவும் வேங்கை என்னும் மரமும், மரம் எறிந்து தினை விதைத்தலும், தினை அறுத்தலும் என்னும் செய்தியுமாகிய கருப் பொருள்களும் வந்தன. என்னை ஊர்ந்தருள் சுடர்வடி யிலையவேற் பெருமான் றன்னை நன்மரு கெனப்படைத் தவன்றன தூர்தி அன்ன தாமெனுங் கேண்மையான் அளிமுகிற் குலத்தைக் கன்னி மாமயில் காண்தொறுங் களிசிறந் தகவும். 43 | மயில், தன்னை ஊர்தியாகவுடைய முருகப் பெருமானைத் தனக்கு நன் மருமகனாகக் கொண்ட இந்திரன் தனக்கு ஊர்தியாகிய மேகக் கூட்டத்தை உறவு பற்றிக் காணுந் தொறும் களிப்பினாலே ஆடும், கூவி அழைக்கும். |