தெற்றற் செஞ்சடை யெம்பிரான் திருமுன்பு நாட்டும் வெற்றித் தம்பமொத் திலகிவல் லிடும்பைகூர் வியாதன் பற்றிச் சிந்தையில் நெடியமால் இணையடி பரவ அற்றைப் போதுமுன் தோன்றிநின் றச்சுதன் அறைவான். | பின்னிக் கிடக்கின்ற சிவந்த சடைமுடியையுடைய எமது பெருமான் சந்நிதியில் நாட்டிய வெற்றியின் அறிகுறியாய தூணைப்போல விளங்கிக் கொடுந்துன்பம் மிகுந்த வியாதமுனிவரர் தமது மனத்தில் திருமாலின் திருவடிகளை இறுகப்பற்றித் துதிக்க அப்பொழுது திருமால் அவர்முன்னே காட்சி தந்திதனைக் கூறுவர். வெற்றித்தூண்: ‘‘கலையானும், வாழி வென்றுவென் றலைகடல் வரைப்பெலாம் நாட்டும், கேழில் வாகைய மதலையும்.................விறந்தன அநேகம்’’ (கச்சி. காஞ். நக. 183) என்ன காரியஞ் செய்தனை என்னையுங் கெடுத்தாய் பன்ம றைப்பரப் பியாவையும் பாற்படுத் தவற்றுட் சொன்ன மெய்ப்பொருள் உண்மையைத் துணிந்தநீ அந்தோ கொன்னும் இம்மயக் கெவ்விடைப் பெற்றனை கூறாய். 15 | என்ன காரியத்தைச் செய்து கெட்டனை! நீ கெட்டதுமன்றி என்னையும் கெடுத்தனை, பல வேதங்களாகிய கடல்கள் அனைத்தையும் வகைப்படுத்தி அவற்றுட் கூறிய மெய்ப்பொருளுண்மையை நிச்சயித்து தெளிவு படுத்திய நீ, ஐயோ அஞ்சத்தகும் இம்மயக்கத்தை எவ்விடத்துப் பெற்றனை அதனைக் கூறாய். ஒருவரிடத்தில்லாத உயர்வுகளை ஏற்றிக் கூறுவோர் அவர்க்குக் கேடு சூழ்வோர் ஆவர் ஆகலின் ‘என்னையும் கெடுத்தாய்’ என்றனர். வேதந்துறைப்படுத்து வேத வியாசனாய நீ அதனொடு பொருந்தாமையின் ‘இம்மயக்கு எவ்விடைப் பெற்றனை கூறாய்’ எனக் கூறினர். வினாவன்று அவலங்குறித்து நின்றது. திருக்கோவையார் 23 - ஆம் செய்யுளின் விசேட வுரை காண்க. ‘‘ஏனை யாரையும் அறத்துறந் தியாவரும் என்றும் பான்மை யில்தியா னஞ்செயப் படும்ஒரு முதல்வன் மேன்மை கூர்சிவன் ஒருவனே’’ எனவிரித் தன்றே நான்ம றைத்தலை யாம்அதர் வச்சிகை நவிலும். 16 | ‘‘பிரமன் முதலிய தேவர்கள் யாவரையும் முற்றக் கைவிடுத்து யாவராலும் எக்காலத்தும் முறையால் தியானஞ் செய்யப்படும் ஒப்பற்ற முதல்வன் மேன்மை மிகுந்த சிவபிரானொருவனே பரமென்று விரித்து நான்கு வேதங்களுள் தலைமை வாய்ந்த அதர்வசிகை என்னும் உபநிடதம் கூறும்.’’ |