பக்கம் எண் :


252காஞ்சிப் புராணம்


காயாரோகணப் படலம்

    எழுசீரடி யாசிரிய விருத்தம்

     வயிறுளைந் தலறிச் சங்கினம் உயிர்த்த மணிநிலா எறித்திருள்
சீத்துப், பயில்விரை முளரி இலஞ்சிசூழ் கிடந்த பணாதரேச்சரம்இது
பகர்ந்தாம், துயில்வர வறியாப் பல்லியந் துவைக்குந் தூமணித்
தெற்றிசூழ் காஞ்சிக், குயிரெனச் சிறந்த உத்தமத் திருக்கா
ரோணத்தின் உண்மையை உரைப்பாம்.                       1

     வயிறு வருந்தி ஓலிட்டுச் சங்கினங்கள் ஈன்ற முத்துக்கள் ஒளிவீசி
இருளை அகற்றித் தங்குதற் கிடனாகிய மணமுடைய தாமரை மலர்களைக்
கொண்ட தடாகங்கள் சூழ்ந்த பணாதரேச்சர வரலாற்றினை உரைத்தாம்.
பல வாச்சியங்களும் இடையறாது முழங்கும் தூயமணிகளான் அமைந்த
திண்ணைகள் சூழ்ந்த காஞ்சிமா நகரத்திற்கு உயிர்போலச் சிறந்த தலைமை
வாய்ந்த திருக்காயாரோகணத்தின் தோற்றத்தைக் கூறுவாம்.

     படுங்கலை முகுர்த்தங் காட்டைகள் என்றாப் பகல்இராப்
பக்கமே திங்க, ளொடும்புணர் இருது ஆண்டுகத் தொடக்கத்
தோதிய அவயவப் பகுப்பான், இடும்பைதீர் காலங் கழிவுறுங்
காலத் தெல்லையில் யாவரும் இறுவர், நெடும்புலக் குறும்பு
கடந்துளீர் உலகின் நிலைப்பதோர் பொருளும்மற் றின்றால்.     2

     தொடர்ந்து வருகின்ற ஐம்புலக் குற்றங்களைக் கடந்தவர்களே! அரி
பிரமர்தம் ஆயுளளவை, பிரிவுபடுகின்ற கலை, முகூர்த்தம், காட்டைகள்
எனவும், பகல், இரவு, பட்சம், மாதம், மாதங்கள் இரண்டு கூடிய இருதுகள்,
ஆண்டுகள், யுகமாகிய தொடக்கத்தோடு கூடிய அவயவப் பகுப்பினால்
துன்பம் தவிர்காலமும் அழிவுறும் அப்போது யாவருமே அழிவர். உலகினில்
அழியாது நிலைபெறும் பொருள் ஒன்றுமில்லை.

     காலம் இயற்கையானும், செயற்கையானும், அவயவப் பகுப்புடைய
தாய்ப் பொருள்களின் தோற்றம், நிலை, இறுதிக்குத் துணையாய் நின்று
அது தானும் அழியும்.

     ஈண்டும்ஓர் இருபான் ஆயிரந் தலைஇட் டியன்றநாற் பத்துமூன்
றிலக்க, யாண்டெனப் படுவ நான்குகத் தளவை இம்முறை ஆயிரம்
இறந்தாற், காண்டகும் அயனுக் கொருபகல் அதுவே கற்பமாம்
இரவும் அத் துணைத்தவ், வாண்டகைக் கந்நாள் முப்பதோர் திங்கள்
அஃதொரு பன்னிரண் டாண்டே.                            4

     கிரேதாயுக முதலிய நான்கு யுக அளவைகள் கூடிய நாற்பத்து
மூன்றிலக்கத்து இருபதினாயிரம் வருடங்கள் என்று சொல்லப்படுவன
இம்முறையாக ஆயிரம் கடந்தால் மதிக்கத்தகும் பிரமனுக்கு ஒரு கற்பமாம்.
இராப்பொழுதும் அவ்வளவினது. அவ்வாறமைந்த நாள் முப்பது ஓர் மாதம்.
அம்மாதம் பன்னிரண்டு கொண்டது ஓர்வருடமாகும்.