பக்கம் எண் :


264காஞ்சிப் புராணம்


பெருகும் அன்பினால் எம்மைநீ வழிபடும் பேற்றால்
இருமை சால்முனி சபித்திடும் ஐயிரு பிறப்பும்
திரிபு றாதுல கினுக்குப காரமாம் தெளிநீ
அருளும் ஐந்தினில் ஐந்தினில் தண்டமும் புரிகேம்.   17

     ‘வளரும் அன்பொடும் எங்களை வழிபடும் நல்வினையால் பெருமை
நிரம்பிய பிருகு முனிவர் சபித்திடும் பத்துப் பிறப்பும் தப்பாமல் உலகினர்க்கு
உதவி செய்யும் பிறவி வாய்க்கும். அதனை நீ உணர்தி, ஐந்து பிறப்பினுள்
நிக்கிரகமும் புரிந்து கொள்வேம்! 

என்று வாய்மலர்ந் தருளலும் நெடியவன் இறைஞ்சி
நன்றும் உய்ந்தனன் அடியனேன் ஞாலத்தின் நீயே
சென்று தண்டமும் அருளும்மற் றியான்பெறச் செய்யின்
மன்ற இப்பெரும் பேற்றினும் பேறுமற் றுளதோ.    18

     என்றிறைவன் வாய்மலர்ந்தருளிய அப்போதே திருநெடுமால்
வணங்கி ‘அடியனேன் பெரிதும் வாழ்வுடையேன் ஆனேன். உலகில் நீயே
எழுந்தருளிவந்து யான தண்டனையும் அருளும் பெற உதவுவாய் என்னின்
நிச்சயமாக இப்பெரும்பாக்கியத்தினும் பாக்கியம் வேறு ஒன்றுளதோ?
(இல்லை.)’

     ‘ஒறுத்தால் ஒன்றும்போதுமே’ (திருவாசகம்). இறைவன் தந்த
சூலையைப்பாராட்டல். (திருத், திருநாவு.)

இன்னும் ஓர்வரம் வேண்டுவல் எளியனேற் குன்பால்
மன்னும் மேதகும் உழுவல்அன் பருள்மதி வள்ளால்
பன்னும் இவ்வரி சாபவெம் பயந்தவிர் இலிங்கத்
தன்னில் என்றும்நீ அமர்ந்தருள் என்றலுந் தலைவன்.   19

     ‘வள்ளலே’ மேலும் ஓர் வரத்தைப் பெற விரும்புவேன். திருவருள்
வலியிலாதேற்கு உன்திருவடியில் நிலைபெறும் எருமையுந் தொடர்ந்த
மேம்பட்ட அன்பினை அருள் செய்வாய். பேசப்பெறும் அரிசாப பயந்தீர்த்த
இந்த இலிங்கத்தில் எழுந்தருளியிருந்து என்றும் அருள் செய்வாயாக என
வேண்டலும் எம் தலைவன்.

வேட்ட யாவையும் வழங்கினன் உவகைமீ தூர்ந்து
பாட்ட ளிக்குலம் விருந்தயர் பசுந்துழாய் மார்பன்
தோட்ட லர்க்கரங் குவித்தெதிர் நிற்பமுச் சுடராம்
நாட்டம் மூன்றுடை நாயகன் இலிங்கத்தின் மறைந்தான்.  20

     விரும்பிய அனைத்தையும் ஈந்தருளி இசை பாடுகின்ற வண்டின்
கூட்டம் விருந்தாகத் தேனை நுகர்கின்ற பசிய துளவினையுடைய
திருமார்பினனாகிய மாயோன் மகிழ்ச்சி மேலெழுந்து இதழ் கொண்ட
மலரனைய கரம் குவித்து எதிர் நின்று துதி செய்ய சோமசூரியாக்கினிகளை
முக்கண்களாக உடைய பெருமான் சிவலிங்கத்தில் மறைந்தருளினன்.