பெருவன்மையை யுடைய தவமுனிவனே! கிரேதாயுகந்தனில் சரசுவதி யொடும் தாமரைமலர்த் தவிசினனாகிய பிரமன் வந்து மேன்மை பொருந்திய இட்ட சித்தித் தீர்த்தத்தில் மூழ்கி நலமிகு சத்திர லோக வாழ்க்கையும் சிருட்டித் தொழிலையும் பெறச் சந்திர சேகரனாகிய இட்ட சித்தீசப் பெருமான் திருவருள் வாய்க்கப் பெற்றனன். ஏயும் நற்றிரே தாயு கத்தின்என் றூழ்ப டிந்து மறைத்தனு ஆயி ரங்கதிர் ஆண்டு தன்றினத் தத்த டம்படிந் தோர்க்கரன் மேய சித்திகள் விரைவின் நல்கவும் விருச்சி கத்தின்அந் நாளுறின் வாயும் அப்பயன் மிகவி ரைந்து வழங்க வும்வரம் எய்தினான். 14 | பொருந்தும் நல்ல திரேதாயுகத்தில் அவ்விட்ட சித்தித் தீர்த்தத்தில் சூரியன் நீராடி வேத வடிவினையும் ஆயிரங் கிரணங்களையும் பெற்று ஆளுதல் புரிந்து தனக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் மூழ்கினோர்க்குச் சிவ பிரான் விரும்பிய பேறுகளை விரைவில் அருளவும், கார்த்திகை மாதத்தில் அஞ்ஞாயிற்றில் மூழ்கிற் பொருந்தும் அப்பயனை அதனினும் விரைந்து வழங்கவும் வரத்தைப் பெற்றனன். துவாப ரத்தரி பூவின் மாதொடு தோன்றி அத்தடம் ஆடினான் தவாது பல்லுயிர் காக்கும் வாழ்வொடு மால்பதந்தனைப் பெற்றனன் உவாம திக்கலை ஆன னாம்பிகை கலியு கத்தில்அந் நீர்படிந் தவாநி றைந்தருள் கம்ப நாயகர் பாதி மேனி அடைந்தனன். 15 | துவாபர யுகத்தில் திருமால் திருமகளோடும் ஆங்கு வந்து தீர்த்தத்தில் மூழ்கினன். அதன் பயனால் பல்லுயிர்களையும் கெடாமற் காக்கும் வாழ்வோடு வைகுந்தப் பதவியையும் ஏற்றனன். பூரணை நாளின் முழுமதி யனைய திருமகத் தம்பிகையார் கலியுகத்தில் அந்நீரில் மூழ்கிப் பெருவிருப்புடன் அருள் செய்கின்ற திருவேகம்பப் பெருமான் திருமேனியில் செம்பாதி பாகம் பெற்றனர். இவர்கள் நால்வரும் நான்கு கங்களுக் கிறைவ ராயினர் மற்றும் இச் சிவமு றும்புனல் ஆடி முன்தின கரன்இ ழந்தபல் எய்தினான் தவள மாமதி முயல கப்பிணி சாடி னன்பகன் என்பவன் துவளுமாறுயர் வீர பத்திரன் தொட்ட வாள்விழி பெற்றனன். 16 | இவர்கள் நால்வரும், அவ்வவ் யுகங்களுக்குத் தலைவரும் ஆயினர். மேலும், நலமமைந்த இத்தீர்த்தத்தில் மூழ்கிச் சூரியன் தக்கன் யாகத்தில் இழந்த பல்லைப் பெற்றனன். வெண்ணிறமுடைய சந்திரன் முயலகன் என்னும் கொடுநோயினின்றும் மீண்டனன். பகன் என்னும் சூரியன் வருந்தும்படி உயர்வு மிகும் வீரபத்திரர் தோண்டிய ஒளி பொருந்திய கண்களைப் பெற்றனன். |