| திருவுள்ளங் களிசிறப்ப வேட்டதெவன் புகலென்னாச் செம்மல் கேட்பக், கருவண்ணன் தமனானோன் கைகூப்பி நின்றியம்புங் கவுரி பாகன், அருளுண்மை தெளியாத தக்கன்றன் வேள்வியைநீ அழித்தஞான்று, தெருளின்றி அமரேற்று நெடுமால்உன் மிசைவிடுத்த திகிரி தன்னை. 17 ‘நன்மனத்திற் களிப்பு மிக விரும்பியது யாது’ என அண்ணல் வினவத் திருமாலிற்குரிய சேனாதிபதி கைகூப்பி நின்று கூறுவன். உமையம்மையார் துணைவருடைய திருவருளுண்மையில் தெளிவு பிறவாது பித்தேறிய தக்கன் இயற்றிய யாகத்தை நீவிர் அழித்த காலை மருளுற்றுப் போரை மேற்கொண்டு திருநெடுமால் நும்மீது ஏவிய சக்கரத்தை, அற்றவர்கட் கினியாய்உன் திருமேனி மிசைப்பூண்ட அயன்கபாலம், பற்றிவிழுங் கியதிந்நாள் அடியேனுக் களித்திஎனப் பகரக் கேளாச், சொற்றதுநங் கரத்தில்லை கபாலத்தின் வாயுளதேல் துகளொன் றில்லாய், மற்றதுவே தரக்கோடி எத்திறத்தும் எனப் புகன்றான் வாகை வேலான். 18 ஏனைய பற்றுக்களைக் கைவிட்டுத் தன்னையே பற்றியவர்க்கு இனியவனே! உன் திருக்கழுத்திற் பூண்டு மார்பிடை விளங்கும் பிரமகபாலம் பற்றி விழுங்கியது இப்பொழுது அடியேனுக்கு அதனை அருளுதி எனக் கூறக்கேட்டு, நீ கூறியது நம் கரத்தில் இல்லை. அதன் வாயில் உளதாயின், குற்றம் சிறிதும் இல்லாதவனே! அதுவேதர எவ்வகை யாகவாயினும் கொள்ளுதி என்றருளினர் வீரபத்திரர். விடுவச்சேனன் விகடக் கூத்தாடுதல் உரைத்தமொழி உளங்கொள்ளா இனிச்செய்வ தென்னேஎன் றோர்ந்தான் யாருஞ், சிரிக்கலுறக் கால்இரண்டும் கரம் இரண்டும் குஞ்சிமாச் செய்து கொண்டு, வரித்தகழல் வீரன்எதிர் வாய்நாசி விழி இணையை மாறி மாறிச், சுரித்தசைத்து நடஞ்செய்தான் எவ்வமொடு பயங்காட்டி எயிறு தோன்ற. 19 எத்திறத்தினும் என்பதை மனத்திற் கொண்டு இப்பொழுது செயத்தக்கது யாதென்றாராய்ந்து சிரிப்புக் கொள்ளாரும் சிரிக்க இரு கால்களையும் இருகைகளையும் முடக்கிக் கொண்டு வீக்கிய கழலுடைய வீரபத்திரர் திரு முன்பு வாயையும், மூக்கையும், இருகண்களையும், முறுக்கியும் வளைத்தும், சுருக்கியும் விரித்தும், குழித்தும் துன்பமும், பயமும் தோற்று வித்துப் பற்கள் தோன்றும்படி விகடக் கூத் தியற்றினான். இவ்வண்ணம் உடல்கூனி வளைந்துநெளிந் தொருவிகடம் இயற்ற நோக்கிச், செவ்வண்ண வயவீரன் வறிதுநகை தோற்றுதலும் திரண்டோர் எல்லாம், மைவண்ணக் கடல்கிளர்ந்தாலென நகைத்தார் அக்காலை மலர்மேல் வைகும், அவ்வண்ணல் நகுபைங்கண் வெண்டலையும் அதுநோக்கிச் சிரித்தலோடும். 20 |