பக்கம் எண் :


தக்கேசப் படலம் 385


இனையன பலவும் பன்னி இரந்திரந் தலந்து கண்டங்
கனையவாய் குழறக் கண்ணீர் வார்ந்திடக் கரங்கள் உச்சி
புனையநின் றிமையோ ரெல்லாம் போற்றுழி முள்தாள் கஞ்ச
மனையவன் எம்பி ரானை வணங்கிவிண் ணப்பஞ் செய்வான்.   69

     இவை ஒப்பன பல அருட்டிறங்களைப் பலமுறை பாராட்டிப் பல்காற்
குறை வேண்டி மனம் மறுகிக்கண்டம் விம்மவும், வாய் குழறவும், கண்ணீர்
வாரவும் கரங்கள் சிரமேற் கூம்பவும் நின்று இமையோர் யாவரும்
போற்றுகையில் முள்ளுடைய தாளுடைத் தாமரை மலரை இடமாக
உடையபிரமன் எமது பெருமானை வணங்கி வேண்டுகோளை முறையிடுவன்

     அலமந்து, என்பது விகாரப்பட்டது. மனை-இடம். ‘நறமனை
வேங்கையின்’ (திருக்கோவையார் 96).

வேள்வியிற் பாகம் நல்கா மருள்மன விண்ணோ ரெல்லாம்
தாழ்நெறித் தக்கனோடுங் குறைவறு தண்டம் பெற்றார்
வாழிய இனிநீ எச்சம் வரமுற அருளிச் செய்து
பாழ்படச் சிதைந்த விண்ணோர் பண்டுபோல் உய்யச் செய்யாய்.  70

     ‘வேள்வியில் அவிப்பாகம் அன்பொடும் வழங்காத தெருளில்லாத
தேவர்கள் யாவரும் புன்னெறியில் புகுந்த தக்கனோடும் நிறைந்த தண்டம்
பெற்றனர். இனி நீ யாகம் மேன்மை பெற அருளி அழிவுண்டாக உறுப்புக்கள்
குறைந்த விண்ணோரை முன்பு போலப் பிழைக்க அருளுக’.

பிரமாதி தேவர் வரம்பெற்றுப் பூசித்தல்

கடுந்தளைப் பிணிப்புண் டார்க்குங் கட்டறுத் தருளாய் என்ன
அடுங்கரி உரித்த பெம்மான் அம்முறை கடைக்கண் சாத்த
இடும்பைதீர்ந் துய்ந்தார் அன்னோர் யாரையும் நோக்கிப் பின்னும்
கொடும்பிழை முழுதும் நீங்கும் வழியினைக் கூற லுற்றான்.    71

     ‘கொடிய விலங்கினாற் கட்டுண்டவர்க்கும் தளை நீக்கி அருள்
செய்வாய்’ என்ன வருத்துகின்ற கரியை உரித்த பெருமான் அவ்வியல்பிற்
திருக்கடைக்கண் நோக்கினை அருளத்துன்பம் நீங்கி இன்புற்றார் யாவரையும்
நோக்கி மேலும் பெரும்பாவம் முற்றும் தவிரும் உபாயத்தை அருள செய்வர்.

எமக்குநீர் பெரிதுங் குற்றம் இழைத்தனிர் அவைதீர்ந் துய்ய
நமக்குமிக் கினிய காஞ்சி நகர்வயின் நண்ணீர் அங்கண்
இமைத்தொளிர் கயிலா யப்பால் நாரதன் இயம்புங் கூற்றின்
அமர்த்தவேல் தக்கன் ஈன்ற அரியச்சு வப்பேர் மைந்தர்.   72

     எமக்குப் பெருங்குற்றத்தைச் சூழ்ந்து செய்தீர்கள். அக்குற்றம் தீரக்
காஞ்சிமா நகரை நண்ணுவீர். அங்குக் கயிலாய நாதர்க்கு ஒருபுடை நாரதர்
உபதேசப்படி போர் செய்தலையுடைய வேலுடைத்தக்கன் பயந்த அரியச்சுவப்
பெயருடைய மக்கள்,