பக்கம் எண் :


388காஞ்சிப் புராணம்


நீற்றறையில் தீங்கின்றி உய்ந்தவாறு போலத் தப்பி வாழ்ந்தனர்; இறைவன்
திருவருள் வழி நிற்பவர்க்குத் துன்பங்கள் வந்து சார்தருமோ? சார்தரா என்க.

     ‘மூவர் உயிர் வாழ முப்புரமு நீறாக, ஏவர் பொருதார் இமையோரில்’
(திருவேகம்பர் உலா.) இரதியை விலக்கி மன்மதனை எரித்த சதுரப்பாடு;
‘‘வாவலங் கிள்ளை மான்தேர் மதன்புரி வினையா லன்னான், வேவரப்
புணர்த்து நோக்கி மிகைபடா தவன்சா ரான, தேவியை முடிக்கும் ஆற்றல்
செய்திலன் இகல்பற்றின்றி, மூவரை விடுத்துத் தொல் நாள் முப்புரம்
பொடித்த முன்னோன்.’’ (கந்த. காமதகனப் படலம். 95)

     ‘‘சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
      சார்தரா சார்தரு நோய்‘‘ (திருக். 359.)

சுதன்மன் என்று சுசீலன் என்று சுபுத்தி என்று சொலப்படும்
அதன்மம் நீத்தஅம் மூவ ருக்கும் அருள்சு ரந்துமை பாகனார்
இதம்வி ளங்க வரங்கள் வேட்ட விளம்பு மின்னென அங்கவர்
பதம்வ ணங்குபு நின்தி ருப்பணி வாயில் காப்பருள் என்றனர்.  3

சுதன்மன் சுசீலன், சுபுத்தி எனப் பெறுவோராகிய அறநெறி நின்ற அம்
மூவரிடத்துக் கருணை கூர்ந்து உமையம்மை பங்கனார் ‘நலமமைந்த வரங்கள்
விரும்பியவற்றைக் கூறுமின்’ என அவர் திருவடிகளை வணங்கித்
‘திருத்தொண்டின்பாற் பட்ட வாயிலைக் காத்தலை அருள் செய்க’ என்றனர்.

கச்சி மாநகர் எய்தி நற்குறி கண்டு பூசனை செய்மினோ
இச்சை யாற்றின் நுமக்கு நந்தளி வாயில் காவலும் ஈதும்என்
றச்ச னாரருள் செய்து நீங்கலும் அங்க ணைந்து வரம்பல
நிச்ச லுந்தரு முப்பு ராரி இலிங்கம் ஒன்று நிறீஇயினார்.     4

     ‘காஞ்சியை எய்தி நம் வடிவினை நிறுவிப் பூசனை புரிமின்
விரும்பியவாறு நுங்கட்குப் பிற வரங்களே அன்றி நம் திருக்கோயில்
வாயிற்காவலும் அருள்வோம்’ என்றுயிர்த்தந்தையார் அருளித்
திருவுருக்கரத்தலும் அக்காஞ்சியை அடைந்து வரம் பலவும் நாடொறும்
வழங்கும் முப்புராரீசப் பெருமானைச் சிவலிங்க வடிவில் பிரதிட்டை
செய்தனர்.

     அச்சன்-அத்தன்; தந்தை. தந்தையை அச்சன் என்பது குடநாட்டு
வழக்கு. (தொல். சொல். 400 நச்சி.)

பூசை யாற்றி உளத்தில் எண்ணிய பேறு பூண்டனர் முப்புரா
ரீச மேன்மை அளக்க வல்லுநர் ஏவர் அப்பெயர் வண்மையான்
மாசில் காஞ்சி வயங்கு கோட்டம் எனப்ப டும்என வாய்திறந்
தோசை யால்உயர் சூதன் ஓத முனிக்க ணத்தர் வினாவுவார்.   5

     பூசனை இயற்றி நினைத்த பேற்றினை ஏற்றனர். அம் முப்புராரீச
மேன்மையை வரையறுத்துக்கூற வல்லவர் யாவர்? குற்றமற்ற காஞ்சியின்
கண் முப்புராரி என்னும் அப்பெயர் நலத்தொடும் கூடி விளங்கு கோட்டம்
எனப்பெறும்’ என வாய்மலர்ந்து புகழால் உயர்ந்த சூதமுனிவர் ஓதக் கேட்ட
முனிவர் குழாத்தினர் வினாவுவர்.