பக்கம் எண் :


391


இரணியேசப் படலம்

கலி விருத்தம்

அரணி யின்கனல் ஐயர் கூற்றடு
சரணி முப்புரா ரீசஞ் சாற்றினாம்
முரணி அங்கதன் குணக்கண் முன்தொழும்
இரணி யேச்சரத் தியல்பு ரைத்துமால்.             1

     தீக்கடை கோலின் தீயையுடைய வேள்வியை இயற்றும் அந்தணர்களே!
கூற்றுவனை அழித்த திருவடியினையுடைய முப்புராரீசத்தைப் பற்றிக்
கூறினோம். அதன் கிழக்கில் தேவர்களோடு பகைத்து இரணியன் முன்னே
தொழுத இரணியேசத் தியல்பினை உரைப்போம்.

இரணி யப்பெயர் அசுரர் ஏறனான்
குரவ னாய்நலங் கொளுத்து வெள்ளியைச்
சரணம் ஏத்துவான் தனியி டத்தினில்
வரவ ழைத்தனன் வணங்கி விண்டனன்.           2

     இரணியன் என்னும் பெயரினையுடைய அசுரரின் மிக்கோன்
ஆசாரியனாய் நன்மையைக் கொள்ளச் செய்கின்ற சுக்கிராசாரியரை
அடிபணியும் பொருட்டு அந்தப்புரத்தில் வரவழைத்து வணங்கிக்கூறுவான்.

அரும்பெ றல்திரு அரசு நான்பெறத்
தரும்ப டித்தொரு விரதஞ் சாற்றென
விரும்பு மந்திரக் கிழவன் வீங்குதோள்
இரும்பின் அன்னவற் கிறைவ ழங்குவான்         3

     ‘பிறர் எவரும் பெறலரிய செல்வங்களையுடைய அரசினையான்
பெறும்படி தர வல்லதோர் விரத்தினை விரித்துரை’ என்று கூற அதனை
விரும்பிய உபதேசஞ் செய்தற்குரிய சுக்கிரன் பருத்த தோள்கள் இரும்பினை
ஒத்த இரணியனுக்கு விடையளிப்பான்.

     தத்துவோப தேசத்திற்கும், ஆலோசனைக்கும் உரியர் என்பார் மந்திரக்
கிழவன் என்றனர்,

வேட்ட வாறிது வாயின் மேவரக்
கேட்டி இவ்வுரை கேடில் ஆற்றலோய்
நாட்டம் மூன்றுடை நாதன் சேவடிக்
கீட்டும் அன்பினால் தவம்இ ழைத்திநீ.            4

     அழிவில்லாத ஆற்றலையுடையோனே!  விரும்பிய வகை இதுவானால்
புகழமைந்த இம்மொழியை விருப்புறக் கேட்பாயாக. முக்கண் முதல்வன்
திருவடிகளில் வைக்கும் பேரன்போடும் தவத்தை இயற்றுதிநீ,

     ஈட்டும் அன்பு: ‘பேரன்பே இன்னும் பெருக்கு, (அற்புதத் திருவந்தாதி.)