பக்கம் எண் :


541


     சொல்லப்பெறும் இத்தகைய மேன்மை நிரம்பிய குமரகோட்டம்
என்னும் தலத்தில் பருந்துகள் விரும்புகின்ற வேலேந்திய முருகப்
பெருமானார் திருவடிகளைக் கார்த்திகை, விசாக நாள்களிலும் மேலும்
நான்கு தினங்களிலும் போய் விரும்பி வணங்குவோர் பெறும் பயனை
யாவரே முற்றவும் கூற வல்லவர் (ஒருவருமிலர்).

குமரகோட்டப்படலம் முற்றிற்று.

ஆகத் திருவித்தம்-1831

மாசாத்தன் தளிப் படலம்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

     நறைகொப் புளிக்கும் நறும்பொகுட்டு நளின வாழ்க்கைப்
புத்தேளைச், சிறையிற் புகுத்தும் பெருமானார் குமர கோட்டச்
சிறப்புரைத்தாம், நிறையப் பூத்த மலர்ப்பொதும்பர் நீடும் அதற்குத்
தென்திசைக்கண், முறையின் திகழும் மாசாத்த முதல்வன் தானம்
எடுத்துரைப்பாம்.                                        1

     தேனையுமிழும் தாமரை மலரில் வாழும் பிரமனைச் சிறையிற்
செலுத்தும் சிறப்பினையுடைய முருகப்பெருமானார் எழுந்தருளியுள்ள
குமரகோட்டத்தின் வரலாற்றினை உரைத்தோம். சோலைமிகும் அதற்குத்
தென்திசையில் விதிப்பட விளங்கும் மாசாத்த முதல்வரது இருக்கையை
எடுத்தோதுவோம்.

சுராசுரர் கலகம்

வைவாள் எயிற்றுத் தானவரும் வானாட் டவரும் மந்தரத்திற்
பைவாய்த் தாம்பு பிணித்தீர்த்துக் கடைந்த ஞான்று பரவைஎழும்
வெவ்வாய் நஞ்சம் மிடற்றடக்கி வெருவா தளித்த பெருங்கருணை
ஐவாய்ப் பணிப்பூண் பெருமானார் அருளான் மீளக் கடைந்தவழி. 2

     கூரிய வாளைப்போலும் பற்களையுடைய அசுரரும், விண்ணோரும்
மந்தர மலையையும், படமுடைய வாசுகியையும் கொண்டு கடைந்த பொழுது
பாற்கடலில் எழுந்த கொடுமை வாய்ந்த விடத்தினைக் கண்டத்தில் அடக்கி
அஞ்சாதபடி அருள் செய்த பேரருளையும் ஐந்தலைப் பாம்பணியும் உடைய
பிரானார் அருளைப் பெற்றுக் கடைந்தபோது,

     சேட்டை அணங்கு திருமணிஆன் தெய்வ மகளிர்
மருத்துவர்நாற், கோட்டு மதமா முதல்பலவும் குரைநீர்க் கடலுள்
தோன்றியபின், வாட்டும் இறவிப் பெரும்பிணிக்கு மருந்தா அமிழ்தந்
தோன்றலும், வேட்ட விண்ணோர் அவுணர்களும் தம்முட் காலங்கள்
விளைத்தனரால்.                                        3