பக்கம் எண் :


தழுவக் குழைந்த படலம் 601


பெருகின. அறங்கள் விளங்கின. வேள்வி பலவும் நிகழ்ந்தன, பரவின
இறைவன் பொருள்சேர் புகழ்கள். வேதாகம உண்மைகள் தழுவப்பெற்றன.
உயிர்களெல்லாம் களிப்பாற் பொலிந்தன.

வெறிமலர்த் தளவ மூரல் விழியிணை மறைத்து நீ்க்குஞ்
சிறுபொழு துலகுக் கெல்லாம் எண்ணில்பல் லூழி சென்று
மறைநெறி படைப்புச் செய்கை யாதிய மறுத்த வாற்றால்
இறைவிதன் வதனம் நோக்கி ஏந்தலார் அருளிச் செய்வார்.   34

     முல்லை யரும்பினை ஒக்கும் பற்களையுடைய பெருமாட்டியார்
பிரானாரின் கண்களைப் புதைத்து நீக்கிய அச்சிறிய பொழுது
உலகுயிர்களுக்கு அளவில்லாத ஊழிக் காலங்கள் கழிந்து வேதவிதிப்படி
நிகழும் சிருட்டி முதலியன தடைப்பட்டமையால் பெருமானார் அம்மையார்
திருமுகம் நோக்கி அருள் செய்வர்.

இறைவன் இறைவிக்குப் பணித்தல்

இருசுடர் தமக்கா தார மாகிய எமது கஞ்சத்
திருவிழி புதைத்த வாற்றால் படைப்பாதிச் செய்கை மாறி
உருகெழு தீமை நின்னை உற்றதால் அதற்குத் தீர்வு
மருமலர்க் குழலி னாய்நீ மரபுளி இயற்றல் வேண்டும்.    35

     சூரிய சந்திரர் தமக்குப் பற்றுக் கோடாகிய எம்மலரனைய
திருவிழிகளைப் புதைத்தமையால் சிருட்டி முதலியன நிகழாது வெருவத்தக்க
பாவம் நின்னைப் பற்றியதாகலின் அப்பாவம் தீர ஏலவார்குழலீ! நீ விதிப்படி
பிராயச்சித்தம் செய்தல் வேண்டும்.

இகப்பருங் கருணை பூண்ட எமக்கும்நின் றனக்கும் நந்தம்
அகத்தடி யவர்க்கும் பாவம் அணுகுவ தில்லை யேனும்
வகுத்தவா புரிதி எல்லாக் கருமமும் மரபி னால்யாம்
நிகழ்த்திய வாறே பற்றி நிகழ்த்திடும் உலகங் கண்டாய்.   36

     உனக்கும், நம் அடியவர்க்கும், நீங்காத பெருங்கருணை பூண்ட
எமக்கும் பாவம் பற்றுதல் இல்லையானாலும் வேத விதிப்படி செய். எல்லாச்
செயல்களும் யாம் செய்யவே உலகோர் பின்பற்றிச் செய்வரென அறி.
‘அகத்தடிமை செய்யும் அந்தணன்’ (சுந்தரர்)

என்றருள் செய்யக் கேட்டு நடுக்கமுற் றிறைஞ்சி நின்று
மன்றலங் குழலாள் கூறும் வள்ளலே கழுவாய்ச் செய்கை
என்றதி யாது செய்யுங் காலமே திடமே தெல்லாம்
நன்றெனக் கருளாய் என்ன நம்பனார் வகுத்துச் சொல்வார்.  37

     என்று அருள் செய்யக்கேட்டு நடுங்கி வணங்கி எழுந்து
வள்ளலே! பிராயச்சித்தம் யாது? அதனைச் செய்தற்குரிய காலமும், இடமும்,
பிறவும் விரித்துரைப்பீரென ஏலவார்குழலியம்மை விண்ணப்பிக்க நம்பனார்
வகுத்துரைப்பார்.