எண்திசை யானைகளும் உடம்புகள் நடுக்கம் அடையப் பெருமூச்சு விடுகின்ற வலிய வெள்ளிய ஏற்றின்மேல் தேனூறுங் கரிய கூந்தலையுடைய காமாட்சி யம்மையுடன் மகிழ்ந்திருந்து சிரேட்டர் (பெரியோர்) போற்றி செய்யத் திருவீதிகளில் பவனி எழுந்தருளினர். பிளிறு வெம்மத யானையின் வெரிந்தலை பிணித்த குளிறு வார்மணி முரசொடு கொக்கரை முழவம் ஒளிறு மாமுடி வானவர் இயங்களும் ஒருங்கே களிறு தாங்கும்எண் டிசைகளுஞ் செவிடுறக் கறங்க. 70 | முழங்குகின்ற கொடிய மதயானையின் முதுகில் வாரினால் இறுக்கிய ஒலிக்கின்ற அழகிய முரச வாத்தியம் கொக்கரை தண்ணுமை ஆகிய இவற்றுடன் ஒளிவிடுகின்ற மணிமுடியினையுடைய தேவர் வாச்சியங்களும் உடன் கலந்து யானைகளால் தாங்கப்படும் எட்டுத் திக்குகளிலும் செவிடு படும்படி பரவி ஒலிக்கவும், வாணி கோன்பணி பானுகம் பப்பெயர் வயவன் வாணி லாவளை ஆயிரம் வாயில்வைத் தூத வாணன் ஆயிரங் கரங்கொடு மணிமுழா முழக்க மாண மத்தள மாதவன் மத்தளம் எழுப்ப. 71 | சரசுவதி நாயகன் சங்கம் முழக்கவும், பானுகம்பன் என்னும் பெயருடைய வீரன் ஒளிநிலவு ஆயிரஞ் சங்குகளை வாயில் வைத்தூதவும் வாணன் ஆயிரங் கரங்களால் அழகிய முழவை முழக்கவும், மாட்சிமையுடைய மத்தள மாதவராகிய திருமால் மத்தளத்தை முழக்கவும், காம நோக்கியை மணம்புணர் காதலன் வந்தான் பூமு லைச்சுவ டணிந்தருள் புண்ணியன் வந்தான் யாமெ லாம்உய்ய வந்தவன் வந்தனன் என்னாத் தாம நித்திலச் சின்னமுங் காளமுங் தழங்க. 72 | காமாட்சியை மணம்புணர்ந்த காதலன் வந்தான், பொற்புடைய முலைச்சுவட்டை அணிந்தருளும் புண்ணியன் வந்தான், யாமெலாம் கண்டுய்ய எழுந்தருளினவன் வந்தான் என்று மாலையணிந்த முத்துச் சின்னமும், ஊது கொம்பும் விருது கூறவும், கீத வேய்ங்குழல் யாழிசை எங்கணுங் கிளர வேத ஓசையும் ஆகம முழக்கமும் விம்ம மாதர் நாடக நூல்முறை மடந்தையர் நடிப்பப் போத விண்ணவர் பூமழை வியனிலம் போர்ப்ப. 73 | மூங்கிலினால் அமைந்த குழலும், யாழும் இசையை எவ்விடத்தும் பரவ எழுப்பவும், வேதாகம ஒலியும் பொங்கவும், அழகிய நாடக நூல் வழி மகளிர் நிருத்தம் செய்யவும், மிக்க விண்ணோர் பூமழையால் அகன்ற உலகை மறைப்பவும், |