பக்கம் எண் :


722காஞ்சிப் புராணம்


பகர்பெரு வளஞ்சால் இந்த மன்றலைப் பண்பு கூர
அகனமர்ந் தேத்தி னோர்கள் கண்டவர் அறையக் கேட்டோர்
தகவுற நினைந்தோர் எல்லாம் தையலார் மன்றல் வாய்ந்து
புகலரும் பரமா னந்த மன்றலும் பொருந்தி வாழ்வார்.      82

     பெருவளம் நிரம்பிய இத்திருமணத்தைப் பண்புமிக அகமகிழ்ந்து
போற்றினோர், கண்டவர், சொல்லக் கேட்டவர், பொருந்துமாறு எண்ணினோர்
யாவரும் அழகிய மகளிரை மணத்தால் எய்தி வாழ்ந்து சொல்லற்கரிய
பேரின்ப மங்கலமும் பொருந்தி வாழ்வார்.

திருமணப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம்-2531

விம்மிதப்படலம்

கலிநிலைத் துறை

சாம கண்டர்தம் ஆணையால் அகிலமுந் தழைப்பக்
காம நோக்கிஎண் ணான் கறங் கரிசற வளர்க்கும்
நாம நீர்வயற் கச்சிமா நகர்வயின் அளவில்
சேம விம்மிதம் உள்ளன சிலஎடுத் திசைப்பாம்.      1

     திருநீலகண்டப் பெருமானார் தம் ஆணையினால் பல்லுலகமும்
வாழக் காமாட்சி முப்பத் திரண்டறங்களையும் குற்றமற வளர்க்கும் இடமாகிய
அச்சந்தரும் அளவு நீர் சூழ்ந்த காஞ்சியாகிய பெரிய நகர்க் கண்
அளவில்லாத காப்புடைய அற்புதங்கள் உள்ளன. அவற்றுட் சிலவற்றைக்
கொண்டு கூறுவோம்.

சாமவேதம் ஓதும் திருமிடறர் எனினும் ஆம்,

தெள்ளொ ளிக்கதிர்ப் பன்மணித் திரளெலாஞ் செறியப்
பள்ள நீர்க்கடல் ஆகர மாகிய பரிசின்
வெள்ள வேணியர் அருளினால் அற்புத விளைவென்
றுள்ள வைக்கெலாம் உறைவிட மாயது காஞ்சி.       2

     சிறந்த ஒளிக் கதிர்களையுடைய பல்வகை மணிக் குவாலுக்கெல்லாம்,
செறிந்து கிடப்ப ஆழமுடைய நீர்க்கடல் இருப்பிடமாகிய தன்மைபோலக்
கங்காதரர் திருவருளால் நிகழும் அற்புத நிகழ்ச்சி என உள்ளவற்றிற்
கெல்லாம் இருப்பிடமாவது காஞ்சி.