பக்கம் எண் :


இராவண காவியம் 15

   

நன்றியுரை
 

     கம்பர் திருநாளும் பெருநாளும், கம்பர் மாநாடும், கம்பராமாயணக் கருத்தரங்கும்
பாட்டரங்கும் பட்டிமன்றமும், விரிவுரையும் விளக்கவுரையும் நடத்தப் பெறும் அத்தகு
சூழ்நிலையில், ‘இராவண காவியம்’ என்னும் பெயரில் ஒரு பெருங் காவியம் செய்யும்
அத்தகு உணர்ச்சியினையும், உள்ளத்துணிவினையும் எனக்கு உண்டாக்கிய தன்மான
இயக்கத் தந்தை பெரியார் அவர்கட்கும், மனமுவந்து சிறப்புப் பாயிரம் தந்து இக்
காவியத்திற்குச் சிறப்பைத் தந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்கட்கும், ‘மாடக்குச்
சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோள் நல்லார்க் கணியும் போல’
அரியதோர் ‘ஆராய்ச்சி முன்னுரை, எழுதியுதவி இக் காவியத்தைச் சிறப்பித்து என்னைப்
பெருமைப்படுத்திய - புகழுருவெய்திய தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா
அவர்கட்கும், தமிழ்மக்கள் படிக்கக் கூடாதென 23 ஆண்டுகளாகத்
தடைவிதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியருளிய தமிழக அரசுக்கும், அத் தடையை
நீக்கித் தமிழ்மக்கள் படித்துப் பயனுறுமாறு செய்ததோடு, தமக்கே உரிய சீரிய செவ்விய
நடையில் ஓர் ‘ஆராய்ச்சி அணிந்துரை’ உதவி என்னையும் என் காவியத்தையும்
பெருமைப்படுத்திய - தமிழ்வாழ, தமிழர் வாழத் தாம் வாழும் தமிழக முதல்வர் டாக்டர்.
கலைஞர் கருணாநிதி அவர்கட்கும், சென்னை மாநில ஆட்சியாளர் காவியத்திற்குத்
தடைவிதித்தபோது, ஆட்சியாளரின் அத் தகாச் செயலைக் கண்டித் தெழுதிய அறிஞர்
அண்ணா முதலிய பெரியார்கட்கும் தமிழ்மக்களின் சார்பாக என்றன் உளங்கனிந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனன். வணக்கம்.

 
பவானி
15-9-71

அன்புள்ள      
புலவர் குழந்தை