செய்த வண்ணமிருக்கிறாள் என்றும் கூறிக்கொண்டே வருகையில், பெருங்கோபம் கொண்ட தாடகை எதிரில் தோன்றிக் கல் மாரி பொழிந்து வேற்படை எறிய முற்படுகிறாள். பெண்ணென மதித்து இராமன் அம்பு தொடாதிருக்கையில் அவளது கொடுமைகளையெல்லாம் விளக்கிய விசுவாமித்திரன், “இவளைப் பெண் என்று கருதற்க; சினம் காரணமாக நான் இவளை வெறுக்கவில்லை; அறம் காரணமாக இவள் அழிதல் நல்லது; எனவே, இவளைக் கொல்வாயாக” என்றான். அதனைக் கேட்டதும் இராமன், “ஐய, அறமல்லது செய்க என்று நீர் ஏவினும் அதனை வேதவாக்காகக் கொண்டு செய்து முடிப்பதே எனக்கு அறமாகும்” என்று கூறிச் சுடுசரம் ஒன்று ஏவி அவளைக் கொல்லுகிறான் என்று கம்ப ராமாயணம் கூறுகிறது. தெலுகு ரங்கநாத ராமாயணமும், பாஸ்கர ராமாயணமும் தாடகை வதையைக் கூறுவதில் வான்மீகியை ஒத்துச் செல்கின்றன. பெண்ணெனத் தயங்கிய இராமனைக் கண்ட விசுவாமித்திரன், “அவள் பெண்ணாயினும் அவளுடைய இரக்கமற்ற கொடுமைகளால் கொல்லப்பட வேண்டியவள்; அவளைக் கொல்லுவதால் புண்ணியம் விளையுமே தவிரப் பாவம் விளையாது” என்று கூறி விளக்கம் தந்து, இதுபோல் கொடியவர்கள் பெண்களாயினும் தேவர் முதலானோரால் முன்னம் கொல்லப்பட்ட நிகழ்ச்சிகளை விவரித்துக் கூறுகிறான். முதலில் காது மூக்குகளை அரிந்து பலவீனப்படுத்துவதை மட்டும் கருதிய இராமன், மாலை நேரம் நெருங்க நெருங்க அவளுடைய அசுரபலம் மிகுதியாவதைக் கண்டு வலிய அம்பொன்றை எய்து அவளைக் கொன்று விடுகிறான். மொல்ல ராமாயணமும் இதே செய்தியைத் தருகிறது; காது, மூக்கு அரியும் நிகழ்ச்சியினை மட்டும் கூறாது விடுக்கிறது. கன்னட பம்பராமாயணமும் தாடகை வதையைக் கூறுவதைத் தவிர்த்துவிடுகிறது. தொரவெ இராமாயணம் இதனைப் பின்வருமாறு கூறுகிறது. பூமி பாரம் தீர்க்க வந்த உன்னுடைய அவதார நோக்கத்தின் முதல் கட்டம் இது. தயங்காமல் இவளைக் கொல் என்றான் விசுவாமித்திரன். (1,10:8) பெண்ணாகிய இவளைக் கொல்வது சத்திரியர்களுக்குத் தகுமா? நான் இவ்வாறு செய்தால் சுவர்க்கம் புகுந்த என் முன்னோர் தேவேந்திரனோடு சேர்ந்து என்னை நகைப்பார்கள். இவளை அவமானப்படுத்துதலே தக்கது. எனவே, இவளைக் கொல்லுமாறு என்னைப் பணிக்க வேண்டாம் என்றான் இராமன். (1,10:10) |