85   யுத்த காண்டம்

உள்ளத்து   அடக்கம்"  என்று ஒளவையும் கூறியது எவ்வளவு
பொருத்தமானது என்பதை அறியமுடிகிறது.
 

யுத்த காண்டத்தில் இன்னும் ஆராயப்படவேண்டிய பகுதிகள்
பற்பல     இருப்பினும்,     இடமின்மை    கருதி   இத்துடன்
நிறுத்தவேண்டியுள்ளது.     இந்த    ஒரு   காண்டத்தைமட்டும்
வைத்துக்கொண்டு இராம,  இலக்குவர்கள்    என்பவர்கள்பற்றிப்
பாத்திரப்படைப்பு என்ற   தலைப்பில்     சிந்திக்க முற்பட்டால்
அது    ஒரு    தனி   நூலளவு   விரியும்   ஆதலால்  இங்கு
விடப்பட்டுள்ளது.
 

பாலகாண்டம்      தொடங்கி,     ஒவ்வொரு காண்டமாகப்
பார்க்கும்பொழுது காப்பியம் என்பதை   விட்டுவிட்டுக்  கவிதை
என்ற    முறையில்   பார்த்தால்கூடக்   கவிதைச்      சிறப்பு
பாலகாண்டத்தில்    மாணிவடிவம்    பெற்ற அனுமனைப்போல்
தொடங்கி, அந்த அனுமன் மால் என  வளர்ந்து  நிற்பது போல்
யுத்த   காண்டத்தில்   இந்தக் கவிஞனின் கவிதைச்    சிறப்பும்
ஒவ்வொரு    காண்டத்திலும்   பெருவளர்ச்சி   பெற்று   யுத்த
காண்டத்தில் கவிதை உலகில் - பிற மொழிக் கவிதைகள் கூட -
உவமை சொல்ல முடியாதபடி இணையற்ற ஒரு முறையில் சிறந்து
நிற்பதைக் காணலாம். இக்கவிஞன் பயன்படுத்தாத   விருத்தப்பா
முறையே இல்லை என்பதை அறியலாம். கலிவிருத்தம் என்று ஒரு
வகைப் பாடலை செய்யுள் இலக்கணம்    குறிக்கின்றது.  அந்தக்
கலிவிருத்தங்களில்    40 வகையை   உண்டாக்கிய    பெருமை
கம்பனுக்கே உண்டு. நதியில் படகு   செல்வது,   கருடன் பறந்து
வருவது   போன்ற நிகழ்ச்சிகளைக்கூடக்  கவிதையின்    ஓசைச்
சிறப்பால் நம்முடைய மனக் கண்முன்  கொண்டுவந்து   நிறுத்தும்
ஆற்றல் இக்கவிஞன்பால் உண்டு. இறைத் தத்துவம், இறை இயல்பு
என்பவற்றை    வெளிப்படையாகக்  கூறாவிடினும்,    சொற்களை
அமைக்கும் முறையில் இக்கருத்துக்கள்   உள்ளடங்கி இருக்குமாறு
பாடும் ஆற்றல் கம்பனுக்கு உரியதாகும்.
 

தனிமனிதர்கள், அவர்கள் கூடிய சமுதாயம், அவர்களை ஆளும்
தலைவன், தனிக் குடும்பம் என்பவற்றை யெல்லாம்    உள்ளடக்கிய
காப்பியம் பக்திக் காப்பியமாகமட்டும் அமையாமல், வாழ  வேண்டிய
வகையை விரித்துக் கூறும் சமுதாயக் காப்பியமாகவும் அமைந்துள்ளது
தமிழர்கள் செய்த தவப் பயனே ஆகும்.