பக்கம் எண் :

74பால காண்டம்  

101.

மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்.
   வேதமும் ஒக்கும்; விண் புகலால்.
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும்.
   திண் பொறி அடக்கிய செயலால்;
காவலின். கலை ஊர் கன்னியை ஒக்கும்;
   சூலத்தால். காளியை ஒக்கும்;
யாவையும் ஒக்கும். பெருமையால். எய்தற்கு
   அருமையால். ஈசனை ஒக்கும்.
 

மேவஅரும் உணர்வு முடிவு இலாமையினால் வேதமும் ஒக்கும்-
(அம்மதியில்)    அடைதற்கறிய  அறிவால்  எல்லை காண  முடியாதபடி
யிருப்பதால் வேதத்துக்கு ஒப்பாகும்.;  விண்  புகலால்      தேவரும்
ஒக்கும்
  -   விண்ணுலகம்   வரை  சென்றிருப்பதால்  தேவர்களையும்
ஒத்திருக்கும்;  திண்   பொறி   அடக்கிய   செயலால்  முனிவரும்
ஒக்கும்
-  வலிய பொறிகளை   உள்ளடக்கிய  செயலால்  முனிவர்களை
ஒத்திருக்கும்;     காவலில்  கலை ஊர் கன்னியை ஒக்கும்- காக்கும்
தொழிலால் மானை      ஊர்தியாகக்  கொண்ட  துர்க்கையை  ஒக்கும்.;
சூலத்தால்  காளியை ஒக்கும்
-   சூலம்   ஏந்தி   இருப்பதால்  காளி
தேவியை  ஒத்துக் காணப்படும்; யாவையும்  ஒக்கும்  பெருமையால்-
பெருமை      மிக்க      எல்லாவற்றையுமே    ஒத்திருக்கும்;எய்தற்கு
அருமையால்    ஈசனை     ஒக்கும்
- எவரும்  எளிதில்  அடைய
இயலாதிருப்பதால் இறைவனை ஒத்திருக்கும்.

வேதம்    அங்கங்களாலும்  உபாங்கங்களாலும் பரந்திருப்பது; முடிவு
காண முடியாத தன்மையுடையது.   மதிலும் பரந்திருப்பது எல்லை காண
இயலாதது  என்பதால்  ‘வேதமும்   ஒக்கும்’ என்றார். விண்ணுலகளவும்
சென்றிருப்பதால்  “தேவனை  ஒக்கும்”   என்றார். பொறிகளை அடக்கி
வாழ்பவர்  முனிவர்.  பலவகை  இயந்திரப்   பொறிகளை உள்ளடக்கிக்
கொண்டிருப்பது   மதில்.   எனவே   “முனிவரை    ஒக்கும்”  என்றர்.
(பொறிகள்-சிலேடை)  துர்க்கை காவல் தெய்வமாய்   நின்று நகரத்தைக்
காவல்  புரிவது போல் மதிலும் காவல் புரிவதால்  “கலையூர் கன்னியை
ஒக்கும்”   என்றார்.   கலை:  மான்.  சூலம்   முதலிய  ஆயுதங்களை
ஏந்தியிருப்பவள்   காளிதேவி;   மதிலிலும்     பலவகைச்   சூலங்கள்
பொருத்தப்பட்டுள்ளன.   எனவே.   “காளியை     ஒக்கும்”  என்றார்.
பக்தியுடையோர்க்கல்லாது     பிறர்    அடைதற்கரியவன்      பரமன்
நண்புடையவர்க்கன்றிப் பிற அரசர்களாலும் அடைய முடியாதது   மதில்
என்பதால் “ஈசனை ஒக்கும்” என்றார்.

இந்தப்   பாடல்   சிலேடையை   அங்கமாகக்   கொண்டு   வந்த
‘உவமையணி’ யாகும்.

மதிலின்  உயர்வு.  திண்மை.  அருமை.  அகலம்  போன்றவைகளை
எடுத்துரைத்துள்ளதை அறியலாம். சூலம்: இடிதாங்கி. சூலாயுதம்.
 

இடிதாங்கி    போன்ற    வடிவுடைய    முத்தலைச்    சூலத்தை
ஏந்தியிருத்தலால் காளியும் ஒக்கும் என்றார்.                  9