அறவணன் தன்பாற் கேட்குவை யிதன்திறம்
என்றவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி
மன்பெரும் பீடிகை தொழுதனள் வணங்கித்
தீவ திலகை தன்னொடுங் கூடிக்
கோமுகி வலஞ்செய்து கொள்கையின் நிற்றலும்
எழுந்துவலம் புரிந்த இளங்கொடி செங்கையில்
தொழுதகை மரபிற் பாத்திரம் புகுதலும்
பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள்
மாத்திரை யின்றி மனமகிழ் வெய்தி
மாரனை வெல்லும் வீர நின்னடி
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி
பிற்ர்க்கறம் முயலும் பெரியோய் நின்னடி
துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி
எண்பிறக் கொழிய இருந்தோய் நின்னடி
கண்பிறர்க் களிக்குங் கண்ணோய் நின்னடி
தீமொழிக் கடைத்த செவியோய் நின்னடி
வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி
நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி
உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி
வணங்குதல் அல்லது வாழ்த்தலென் நாவிற்
கடங்கா தென்ற வாயிழை முன்னர்ப்
போதி நீழற் பொருந்தித் தோன்றும்
நாதன் பாதம் நவைகெட ஏத்தித்
தீவ திலகை சேயிழைக் குரைக்கும்
குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி யென்றும் பாவியது தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக் கென்நா நிமிராது
புன்மரம் புகையப் புகையழல் பொங்கி
மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தலின்
அரசுதலை நீங்கிய வருமறை யந்தணன்
இருநில மருங்கின் யாங்கணுந் திரிவோன்
|