பக்கம் எண் :

பக்கம் எண் :296

Manimegalai-Book Content
21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை

வான்வழியே போந்து மணிபல்லவத்தை அடைந்தாளென்றும், அரசன் நாவாயிலேறி அத்தீவினை அடைந்தானென்றும் மேல் 25 ஆம் காதையிற் கூறப்படுதலின், ஈண்டு எழுந்து அவனொடும் சேறலுமுண்டு எனக் கூட்டியுரைக்க ; அன்றி, ஒடுவை வேறு வினையுடனிகழ்வாக்கி, அவன் வங்கத்திற் புறப்படத் தான் வானிலே யெழுந்து என்றுரைத்தலுமாம்.

88--91. தீவதிலகையின் தன் திறம் கேட்டுச் சாவகமன்னன் தன் நாடு அடைந்த பின் - சாவக நாட்டரசனாகிய ஆபுத்திரன் தீவ திலகையினால் தன்னுடைய வரலாற்றைக்கேட்டுத் தனதுநாட்டை அடைந்த பின், ஆங்கத் தீவம் விட்டு அருந்தவன் வடிவாய்ப் பூங்கொடி வஞ்சிமாநகர் புகுவை - பூங்கொடி போலும் நீ அரிய தவமுடைய ஆடவன் வடிவத்துடன் அத்தீவை விட்டு நீங்கி வஞ்சிமா நகரம் சேர்வை ;

92--93. ஆங்கந் நகரத்து அறிபொருள் வினாவும் ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் - அந் நகரத்திலே ஏனோர் அறிந்த மெய்ப் பொருளை வினவுகின்ற சிறந்த கேள்வி மேம்பட்டோர் பலராவர் ;

94--102. இறைவன் எங்கோன் எவ்வுயிர் அனைத்தும் முறைமையில் படைத்த முதல்வன் என்போர்களும்-எத்தகைய உயிர்த்தொகுதிகள் அனைத்தையும் முறைமையாகப் படைத்த முதல்வனே இறைவனாகிய எம் தலைவன் என்று கூறுவோர்களும், தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன் அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும் - தனக்கென உருவமில்லாதோனும் பிற வுருக்களைத் தோற்றுவிப்போனுமாகிய அவனே முதல்வனாவான் என்றுரைப் போர்களும் துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்தாங்கு இன்பவுலகு உச்சி இருத்தும் என்போர்களும் - துன்பமாகிய கன்மங்கள் இந்தத் தொடக்கினை அறுத்து இன்பவுலகின் உச்சியில் இருத்தும் என மொழிவோர்களும், பூத விகாரப் புணர்ப்பு என் போர்களும் - பூதங்களின் திரிபாலாயது என்று கூறுவோர்களும் ஆகிய, பல்வேறு சமயப் படிற்றுரை எல்லம் அல்லியங்கோதை கேட்குறும் அந்நாள் - பலவேறு சமயத்தினரின் பொய்யுரைகளை எல்லாம் நறுமலர்க்கோதை கேட்கலுறும் அந்நாளில் ;

துன்ப நோன்பு - துன்ப முழந்து செய்யும் கன்மம்; நோன்பு - விரதமுமாம்; 1"விரத மேபர மாகவே தியரும், சரத மாகவே சாத்திரங் காட்டினர்" என்பது காண்க. அல்லியங்கோதை : முன்னிலையிற் படர்க்கை ; நீ கேட்குறும் என்க. உயிரனைத்தும் படைத்த முதல்வன் இறைவன் என்போர் சைவவாதி, வைணவவாதி, பிரமவாதி என்னும் மூவருமாவர். தன்னுருவில்லோன் இறைவனாகு மென்போர் அத்துவிதவாதிகள் என்பர் ; சைவவாதிகட்கும் பொருந்தும். நோன்பு இன்ப வுலகுச்சி இருந்து மென்போர் மீமாஞ்சகர். பூதவிகாரப்


1 திருவாசகம். போற்றி. 50-1.