பக்கம் எண் :

பக்கம் எண் :295

Manimegalai-Book Content
21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை

பிறப்புக்களினும் தொடரும் என்பதனை, 1" எழுமை யெழுபிறப்பும்" என்பதற்குப் பரிமேலழகர் கூறிய உரையானறிக.

72--5. இன்னுங் கேளாய் இளங்கொடி நல்லாய்-இளமை பொருந்திய கொடிபோலும் மெல்லியலே இன்னும் யான் கூறுவதனைக் கேள், மன்னவன் மகற்கு வருந்துதுயர் எய்தி - அரச குமாரன் இறந்தமை குறித்து மிக்க துயரமடைந்து, மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டு - முனிவர்கள் அறிவுறுத்திய மெய்ம்மொழியைக் கேட்டு, காவலன் நின்னையும் காவல் செய்து ஆங்கிடும் - அரசன் நின்னைச் சிறையிலிடுவான் ;

உணர்த்தியவன் ஒருவனாயினும் உரைக்கவந்தோர் பலராதலின் ''மாதவ ருணர்த்திய'' என்றார்.

76--81. இடுசிறை நீக்கி இராசமாதேவி-அரசன் பெருந்தேவி நின்னைச் சிறையினின்றும் நீக்கி, கூடவைக்கும் கொட்பினள் ஆகி - தன்னுடன் வைத்துக்கொள்ளும் கொள்கையுடையவளாய், மாதவி மாதவன் மலரடி வணங்கித் தீது கூற - மாதவி அறவணவடிகள் திருவடி மலர்களை வணங்கி நினக்கு நேர்ந்த தீமையை உரைக்க, அவள் தன்னொடும் சேர்ந்து மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு-அறவணவடிகள் மாதவியுடன் வந்து கூறிய மெய்யுரைகளைக் கேட்டு, காதலி நின்னையும் காவல் நீக்குவள் - அவளது அன்புக்குரியளாய நின்னைக் காவலினின்று நீக்குவாள் ;
ஈடுசிறை யென்பது பாடமாயின் சிறையீடு என மாறுக. கொட்பு- கொள்கை; திரிபுணர்ச்சியுமாம். இராசமாதேவி நீக்கிவைக்குங் கொட்பினளாகி வாய்மொழி கேட்டு நின்னைக் காவலினீக்குவள் என்க.

82--7. அரசாள் செல்வத்து ஆபுத்திரன்பால் புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை-அரசாளுஞ் செல்வத்தினையுடைய ஆபுத்திரனாகிய புண்ணியராசனிடம் அறவணவடிகளை வணங்கிச் செல்லுதலுஞ் செய்வை, போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி - அங்ஙனம் சென்றால் அபுத்திரனொடும் அறவுடைகளைக் கேட்டு, மாநீர் வங்கத்து அவனொடும்-பெரிய கடலின்கண் கலத்திற் செல்லும் ஆபுத்திரனோடு, எழுந்து-விசும்பின் எழுந்து, மாயமில் செய்தி மணி பல்லவம் என்னும் தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்- வஞ்சமில்லாத செயலினையுடைய மணிபல்லவம் என்னும் தீவின் கண் இன்னும் ஒரு முறை அடைதலும் உண்டு ;

ஈண்டு ஆபுத்திரன் என்றது நாகபுரத்தரசனாகிய புண்ணியராசனை: இது, 2"நாக புரமிது நன்னக ராள்வோன், பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்" என மேல் வருவதனால் அறியப்படும். பொருளுரை - நாகபுரத்தின் அயலதாகிய சோலையிலுள்ள தருமசாவகன் ஆபுத்தரனுக்குக் கூறும் தத்துவ மொழிகள், மணிமேகலை நாகபுரத்திலிருந்து


1 திருக்குறள், 107.  2 மணி. 24 : 169 - 70.