பக்கம் எண் :

பக்கம் எண் :294

Manimegalai-Book Content
21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை

சிதைய வீழ்ந்த மடையனை - சோற்றுப் பாத்திரம் அழியுமாறு வீழ்ந்த அடுந் தொழிலோனை, சீலம் நீங்காச் செய்தவத்தோர்க்கு- ஐவகைச் சீலமும் தவறாத பெருந்தவத்தோர்க்கு, வேலை பிழைத்த வெகுளி தோன்ற - காலந்தவறியதனா லுண்டாகிய சினமானது தோன்ற, தோளும் தலையும் துணிந்து வேறாக-தோளும் தலையும் துணிபட்டு வேறாகுமாறு, வாளில் தப்பிய வல்வினை அன்றே - இராகுலன் வாளால் வெட்டிய தீவினையல்லவோ, விராமலர்க் கூந்தல் மெல்லியல் நின்னோடு - மணம் பொருந்திய மலர்களையணிந்த கூந்தலையுடைய மெல்லியலே நின்னுடன், இராகுலன் தன்னை இட்டு அகலாதது-இராகுலனையும்விட்டு நீங்காததாகியது;

தோன்று அ வேலை யெனப் பிரித்தலுமாம். வரூஉ-வாரா நின்று மடையன்-சோறுசமைப்போன். சீலம் - கள், பொய், காமம், கொலை, களவு என்னும் ஐந்தனையும் முற்றத் துறத்தல் ; இதனை, 1"ஐவகைச் சீலத் தமைதியுங் காட்டி" 2"கள்ளும் பொய்யும் காமமுங் கொலையும், உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை" எனபவற்றானறிக ; இவ்வைந்தும் இல்லறத்தார்க் குரியனவென்றும், இவற்றோடு உயர்ந்த ஆதனத்தில் இருத்தல் கிடத்தலின்மை, சாந்து மாலை முதலியன தரியாமை, பொன் வெள்ளிகளைத் தீண்டாமை, பாடலாடல் விரும்பாமை, விடியலுக்குமுன் புசியாமை என்னும் ஐந்துஞ் சேரச் சீலம் பத்து வகைப்படுமென்றும், அவை துறவிகட்குரியன வென்றும் புத்தமத நூல் கூறும்.

63--71. தலைவன் காக்கும் தன் பொருட்டு ஆகிய அவல வெவ்வினை என்போர் அறியார்-தம்மாலாகிய துன்பந்தரும் கொடிய வினையை இறைவன் காப்பான் என்போர் அறியாதவராவர், அறஞ்செய் காதல் அன்பினின் ஆயினும் - அறம்புரியும் பெருவிருப்புடனாயினும், மறஞ்செய்துளதெனினும் வல்வினை ஓழியாது-பாவம் செய்யப் பட்டுள்ளதெனின் அது நீங்காது, ஆங்கவ்வினை வந்து அணுகும் காலைத் தீங்குறும் உயிரே-அத்தீவினை வந்து சாரும்பொழுது உயிர் துன்பமுறா நிற்கும், செய்வினை மருங்கின் மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும்-செய்வினை வழித்தாய் மீளவரும் பிறவிகளிலும் அத் தீவினைத்தொடக்கு மீண்டெய்தினும் எய்தும். ஆங்கவ் வினைகாண் ஆயிழை கணவனை ஈங்கு வந்து இவ்விடர் செய்து ஒழிந்தது-முற்பிறப்பில் மடையனை வெட்டிய அத் தீவினையே நின் கணவனுக்கு இப்பிறப்பில் வந்து இத் துன்பத்தைச் செய்து போயது ;

காக்கும்-தடுப்பான் என்றபடி. தம்பொருட்டாகிய-தம்மாலாகிய என்க. செய்துளதெனின் - செய்யப்பட்டுள்ளதெனின். வல்வினை : சுட்டு. ஒழியாது - தன் பயனை ஊட்டாது கழியாது. உயிர் தீங்குறும் என்க. மீண்டு வரு பிறப்பு-மேல் வரும் பிறப்புக்கள். வினைப்பயன்பல


1 மணி. 2 ; 68  2 மணி. 24 ; 77-8