|
தோன்றும்" என்றார்.உத்தியோதகரரும் காட்சி, நிகழ்காலத்துக்கே
யுரித்தென்றும், கருதல்முக்காலத்துக்கு முரித்தென்றும் கூறுவர் (நியாய வார்த்.
ii. 1 - 31). காண்பொருளும், இடைநிற்கும் ஒளி முதலியனவும், பொறியும், மனமும், உயிரும் என்ற ஐந்தனுள், காட்சிப் பயன் கோடற்கும், மனமும் பொறியும் காண்டலைச்
செய்தற்கும்,உயிர் இன்றியமையாமையின், "மாண்ட வுயிர் முதல்" என்றும், மனமும்
பொறியும் குற்றமுற்ற வழிக் காட்சி நிகழாமையின், "மாசின்றாகி"யென்றும்
கூறனார்; "உயிரும் வாயிலும் மனமுமூ றின்றி" (மணி 27; 30) என்றதே மீளவும்
கூறியது, வன்புறை.
3.
உவமவளவை
41--2.உவமமாவது - உவம வளவையாவது; ஒப்புமை அளவை - ஒன்றோடொன்றனை
யொப்புக் கூறியுணர்த்தும் அளவையாகும்; கவயமா - கவயமா வென்பது ஒரு விலங்கென
அறியாதானுக்கு அக் கவயமா; ஆப்போலும் எனக்கருதல்-பசுவைப்போலிருக்கும் என்று
சொல்லி யுணர்த்துதலாம் எ - று.
தானே யுணர்ந்து கோடற்கு உவமை
வேண்டாமையின், ஈண்டுக் கருதுதல் பிறவினைப் பொருட்டு. இதனால் தமிழ்நூலார்
பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளும் உவமத்தை அணிநூலார் உவம வணியென்று
கொண்டாங்கு, அளவைநூலார் உவமவளவை யென்று கொண்டனரென வறிக. இதுவும் "காண்டற்
பொருளாற் கண்டில துணர்த"லாயினும்,கருத்தளவை தன் பொருட்டும் பிறர் பொருட்டும்
பயன்படுவதாக, இது பிறர் பொருட்டே பயன்படுமென்றும், அது காணப்பட்ட ஏதுவைக்கொண்டு
காணப்படாத பொருளை யுணர்த்தி நிற்க, இது காணப்பட்ட பொரு ளொப்புமையாற்
காணப்படாத பொருளை யுணர்த்துமென்றும் கொள்க. அறிதற்குரிய பொருளும் அதற்குத்
துணையாகும் ஒப்புமையும் உவமவளவைக்கு இன்றியமையாத வுறுப்புக்களாம். இவ் வொப்புமை
முழுதுமொத்தல், ஒருபுடை யொத்தல் என இருதிறத்ததாம். முழுதுமொத்தற்கு உவமம்வேண்டா;
பசு வென்பது பசுப்போலும் எனக் கூறாராதலின்; உவமமெல்லாம் ஒரு புடை யொத்தேயிருக்கும்.
மேலும் பொருளும் உவமமும் என்ற இரண்டனுள் உவமத்துக்கும் பொருட்கும் "சாதன சாத்தியபாவம்"
இன்றியமையாது என்று நியாயபாடியம் (ii. 1 - 45) கூறுகிறது. இவ்வளவை
நூலாரைப் போலவே சட்தரிசனமுச்சய மென்னும் நூலாசிரியரான அரிபத்திரரும்
இக் கவயமாவையே உவமவளவைக்குப் பொருளாகக் காட்டுவர். இவ் வளவையை வைசேடிகர்
கருதலளவைக் கண்ணும், சாங்கியரும் புத்தரும் காட்சிக்கண்ணும் அடக்கிக்கொள்வர்.
பூருவமீமாஞ்சகரும் வேதாந்திகளும் இதனை மேற்கொண்டு இலக்கணத்திற் சிறிது வேறுபடக்
கூறுவர்.
|