பக்கம் எண் :

பக்கம் எண் :410

Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
 

35--36.  முதல் என மொழிவது - முதற் கருத்தளவையென வழங்குவது ; கருக்கொள் முகில் கண்டு - நீர் பொருந்திய கருமுகிலைக் கண்டு, இது மழைபெய்யும் என இயம்பிடுதல் - இம்முகில் மழை பொழியும் எனத் துணிந்து கூறுவதாம். எ - று,

மழை பெயற்கு முகில் காரணமாதலின், முதலெனப்பட்டது காரணத்தை முதலென்றல் தமிழ் வழக்கு; "ஆயெட்டென்ப தொழின் முதனிலையே" (தொல். சொல். வேற். மயங். 29) என்றும், "அவ்விரு முதலிற் றோன்று மதுவே" (சொல். வேற்று, 10) என்றும் வருதல் காண்க. கமஞ்சூல் மாமழையைக் "கருக்கொள் முகில்" என்றார். இவ் வெடுத்துக் காட்டே வாற்சாயனராலும் காட்டப்பட்டுள்ளது. இதனைக் காரணானுமானம் என்றலும் ஒன்று.

37--40.  என்னும் ஏதுவின் ஒன்று - பொது எச்சம் முதல் என்று கூறப்பட்ட ஏது வகைகளில் ஒன்று ; முக்காலம் ஒன்று தன்னிற் சார்ந்துளதாகி தோன்றும் - மூவகைக் காலங்களில் ஒன்றைப் பொருந்தியதாய்த் தோன்றும்; காண்டற்பொருளால்-காணப்படும் பொருளைக்கொண்டு; மாண்ட உயிர் முதல்-மாட்சிமைப்பட்ட உயிராகிய முதல்; கண்டிலது-காணப்படாததனை; மாசின்றாகி - குற்றமின்றி ; உணர்தல் - அறிவதாம் எ - று.

எனவே, காண்டற் பொருளாற் காணப்படாததனை யுணர்தல் அனுமானவளவை யென்பதாம். "என்னும் ஏதுவின் ஒன்று" என்றதனால், சாமானியம் சேடம் பூருவம் என்ற மூன்றும் ஏதுவின் வகைமை யுணர்த்தி நிற்பது பெற்றாம். இனி, நையாரிகருட் பலர் பலவேறு கருத்துக்களைக் கூறுவர் ; ஈண்டுக் கூறியது வாற்சாயனர் முதலிய பண்டையாசிரியன்மார் கொண்ட கருத்தாமென அறிக. இவ்வாறே அனுமானமென்பதற்கும் ஆசிரியர் பலரும் பலவாறு கூறுப: நியாயவார்த்திகையென்னும் நூலுடையார், தெரியாததொரு பொருளையாதல், தெரிந்ததொரு பொருளையாதல் காண்டற்குப் பயன்படுவதன்றி, ஐயப் புலப் பொருளொன்றினைத் துணிதற்குப் பயன்படுவது அனுமானவளவையென்றும், நியாயசாரமுடையார், பொறிகளின் காட்சியெல்லைக்கப்பாற்பட்டு நிற்குமொரு பொருளை அதனிற் பிரிப்பறத் தொடர்புற்று, அப்பொறிகளின் காட்சிக் ககப்பட்டிருக்கும் பிறிதொன்றின் வாயிலாகக் காண்டற்கு அனுமானம் அளவையாமென்றும்,தத்துவசிந்தாமணி யாசிரியரான கங்கேசரும், சத்தபதார்த்தி யாசிரியரான சிவாதித்தரும் ஓரறிவைக் கொண்டு பெறலாகும் பிறிதோரறிவு அனுமான வறிவாம் என்றும் கூறுவர். இது குறித்து ஏனை வைசேடிகர், சாங்கியர், புத்தர், சமணர் முதலாயினோர் வேறு வேறு கூறியுள்ளனர் ; அவற்றை அவ்வவர் நூங்களுட் காண்க.

காட்சியளவை போலாது, இக்கருத்தளவை முக்காலத்தும் ஒத்தியலும் இயல்பிற்றாதலின், "முக்காலந்தன்னிலொன்றிற் சார்ந்துளதாகித