பக்கம் எண் :

பக்கம் எண் :409

Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
 

நிலைக்களமாய புகை, குறி. இக்குறியை இலிங்கமென்ப. அனுமேயப் பொருட்குத் தகுதி சாதிக்கப்படும் உண்மைத்தன்மை யாதலின், "தகைமை"யெனப்பட்டது. இப் பொது முதலிய மூன்றையும் முறையே அளவை நூலார் சாமானியதா திருட்டம், சேடம், பூருவம் என்று கூறுவர்.

29--32.  பொதுவெனப்படுவது - பொதுக் கருத்தளவை யென்று அளவை நூற்புலவராற் கூறப்படுவது, சாதன சாத்தியம் இவை - ஏதுவும் மேற்கோளுமாகிய இவற்றுக்கு, அந்நுவயம் இன்றாய் இருந்தும் - நியதமான உடனிகழ்ச்சி இலதாகிய வழியும், கானம்- காட்டிடத்தே, கடம் திகழ்யானை ஒலிகேட்டோன்-மதம் பொருந்திய யானையின் பிளிறு குரலைக் கேட்டவன் ; உடங்கு - உடனே, எழில் யானை அங்குஉண்டென உணர்தல்-உயர்ந்த யானையொன்று அவ்விடத்தே யுளது என்று உணர்வது எ - று.

பொது முதலிய மூன்றுக்கும் உரிய சாமானியதா திருட்டம், சேடம், பூருவம் என்பனபற்றி நையாயிகர் பலர்க்கும் கருத்து வேறுபாடு பெரிது முண்டாயினும், இவ்வாசிரியர் வாற்சாயனர் கூறியாங்குக் கூறுகின்றா ராதலின், "பொது வெனப்படுவது" எனச் சிறப்பித்தார். அந்நுவயமானது காரண காரியத் தொடர்பு இடையறவின்றிச் சேர அமைவது. கானவொலிக்கும் யானை யுண்மைக்கும் அந்நுவய மில்லாமையின் "அந் நுவயமின்றா யிருந்தும்" என்றும், கேள்வியும் உணர்வும் இடையறவுபடாத உடனிகழ்ச்சி யாதலால், "உடங்குணர்தல்" என்றுங் கூறினார். எழுச்சிப் பொருட்டாய எழில் ஈண்டு உயர்ச்சி குறித்து நின்றது. இனிச், சாமானியதா திருட்டத்துக்கு வாற்சாயனர், ஒலிக் கேள்வியோடு கொம்புள்ள விலங்கொன்றினைக் கண்டோன், அதற்கு வாலுண்டென வுணர்தலும் சாமானியதா திருட்டம் என்று கூறினர். இவருக்குப் பிற்போந்த உத்தியோதகரர், நாரைகள் குழீஇ யிருப்பதைக் கண்டோன், அங்கே நீருண்டெனத் துணிதல் சாமானியதா திருட்டம் என்றார் ஆயினும், அவர் இம்மூன்றனையும் பற்றிக்கொண்ட கருத்து வேறென அறிக. இதனைச் சாமானியாநுமானம் என்றும் கூறுவர்.

33--4.  எச்சம் என்பது - எச்சக் கருத்தளவையாவது ; வெள்ள ஏதுவினால் - இவண் வருகின்ற வெள்ளமாகிய காரணத்தைக் கொண்டு ; அத் தலை மழை நிகழ்வு - அதன் மேலிடமாகிய அவ்விடத்தே மழை பெய்திருத்தலை ; நிச்சயித் துரைத்தல்-துணிந்து கூறுவதாம் எ - று.

பள்ளத்தை நோக்கி யோடுதல் நீர்க்கியல்பாதலின், அத்தலையென்றது மேலிடமாகிய அவ்விடமாயிற்று. மழையினது எச்சம் வெள்ளமாதலின், வெள்ளவேது கொண்டு சாதிக்கும் கருத்தளவை, எச்சக் கருத்தளவை யெனப்பட்டமை யறிக. இந்த எடுத்துக்காட்டையே வாற்சாயனரும் காட்டியுள்ளார். இதனைக் காரியானுமான மென்றும் கூறுப.