|
பொருண்மை, உணர்வுருவாய் நின்று உரைக்கு எய்தாதாகலின், அஃது எய்துதற்கு இவை
வேண்டப்படுதலின், "கிட்டிய தேட...கிரியையின் அறிவதாகும்" என்றார். தருமகீர்த்தி
முதலாயினார் நாமசாதி குணங்கிரியைகளின் வைத்துக் காணும் காட்சியறிவைச் சாமானிய
விலக்கணமென்றும், இவையின்றிப் பொருண்மைக்காட்சி யுணர்வைச் சுவிலக் கணமென்றும்
கூறுவர். துயக்கு-குற்றம்; தடையுமாம். ஏனையளவை போலாது பொருள்களை நேரிற் கண்டறிதலின்
காட்சியை "மருளில் காட்சி" என்றாரென வறிக. சுட்டல் முதலியவற்றை மேலே "பிரமாணா
பாச" மென எடுத்தோதி விலக்குதலின், ஈண்டு வாளாது தொகுத்தோதினார்.
இனிக் கண்ணாலொரு பொருளைக்
காணுமிடத்தும் நிறமேயன்றியளவு வடிவு முதலிய பிறவும் காணப்படுமாயினும் சிறப்புப்பற்றி
நிறம் கூறினார். இவ்வாறே பிறவற்றிற்கும் கொள்க. அன்றியும், ஒரு பொருளைக்
கண்ணாற் காணுமிடத்துக். கட்பொறியும், மனமும், உயிரும், காண்டற்குத் துணையாகும்
ஒளியும் ஒருங்கு தொழில் நிகழ்த்துவது போலச் செவி முதலியவற்றா னிகழும் காட்சிக்கண்ணும்
இந்நிகழ்ச்சியுண்மையின் இவ்வாறே கூறிக்கொள்க. மனமும் உயிரும் பொதுவாயினும்,
பொறிகளும் அவற்றாற் காணப்படும் பொருளும் ஐவகைப்படுவது பற்றி, "காட்சி யைவகை
யாகும்" என்றார். நாமதேசக் குணக் கிரியையின் வைத்தறியும் காட்சி சவிகற்பமென்றும்''
அவ்வியபதேசமாய்க் காண்பது நிருவிகற்பமென்றும் பிற்காலத்தோர் கூறுவர். வாற்சாயனர்,
உத்தியோதகரர் முதலாயினோர் காலத்தே இப்பிரிவு இல்லை. அவர்களைப்போலவே
இம் மணிமேகலை ஆசிரியரும் சவிகற்ப நிருவிகற்பப் பிரிவு கூறாமை குறிக்கத்தக்கது.
2.கருத்தளவை
25--9. கருத்தளவாவது - அனுமான வளவையாவது, குறிக்கொள் அனுமானத்து
அனுமேயத் தகைமை யுணரும் தன்மையதாகும் - ஏதுவுக்கு நிலைக்களமான குறியாகக்கொண்டு
அனுமானத்தாலே சாதிக்கப்படும் பொருளின் உண்மைத் தன்மையை உணர்த்தும் தன்மையுடையதாகும்,
அது - அவ்வனுமானவளவை, மூவகையுற்று - மூன்று வகைப்பட்டு, பொது எச்சம் முதல் ஆம்
- பொதுவென்றும் எச்சமென்றும் முதலென்றுமாம் எ - று.
ஈண்டு அனுமேயம் என்றது துணியப்படும்
மேற்கோளையும். அனுமானமென்றது அதனைத் துணிபு செய்யும் ஏதுவையும் குறித்து நின்றன.
குறிகொள் எனற்பாலது எதுகை நோக்கிக் குறிக்கொள் என நின்றது; குறிகொள்
என்றும் பாடமுண்டு. இம்மலை தீ யுடைத்து, புகையுண்மையான் என்ற வழி, மலையின்பால்
தீயுடைமை துணியப்படும் மேற்கோளாகிய அனுமேயம். புகை யுண்மை, அதனைச் சாதிக்கும்
எது. அது தீ யுண்மையைத் துணிபு செய்யும் திறம் அனுமானம், அவ்வேதுவுக்கு
|